நோயாளிகளை அலைக்கழித்த பெண் டாக்டர் பணி இடைநீக்கம் - மந்திரி ஸ்ரீராமுலு உத்தரவு


நோயாளிகளை அலைக்கழித்த பெண் டாக்டர் பணி இடைநீக்கம் - மந்திரி ஸ்ரீராமுலு உத்தரவு
x
தினத்தந்தி 26 Sept 2019 4:13 AM IST (Updated: 26 Sept 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மந்திரி ஸ்ரீராமுலு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நோயாளிகளை அலைக்கழித்ததாக புகார் கூறப்பட்ட பெண் டாக்டரை பணி இடைநீக்கம் செய்து மந்திரி ஸ்ரீராமுலு உத்தரவிட்டார்.

கொள்ளேகால்,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் மாலையில் திடீரென சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் ஆஸ்பத்திரியை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நோயாளிகளை அலைக்கழித்ததாகவும், அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காமல் திட்டியதாகவும் டாக்டர் சசிரேகா என்பவர் மீது புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து டாக்டர் சசிரேகாவை பணி இடைநீக்கம் செய்து மந்திரி ஸ்ரீராமுலு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் சிறைக்கு சென்றதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாதான் காரணம். சித்தராமையா ஒரு பெரிய நடிகர். அவர் அரங்கேற்றும் நாடகங்களை நம்மால் யூகிக்கவே முடியாது. குமாரசாமி, தேவேகவுடாவிடம் நான் ஏற்கனவே சித்தராமையாவின் நாடகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அதை அவர்கள் கேட்கவில்லை. தற்போது நான் சொன்னதுதான் நடந்துள்ளது. அவர்கள் ஆட்சி, அதிகாரத்தை இழந்துள்ளனர்.

நான் முதல்-மந்திரி ஆகிட வேண்டும் என்று என்னுடைய தொகுதி மக்களும், எனது ஆதரவாளர்களும் விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பினால் மட்டும் போதுமா?. கட்சி மேலிடம் இதுபற்றி முடிவு எடுக்க வேண்டாமா?. நான் மக்களுக்கு சேவை செய்யவே மந்திரி ஆனேன். மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக நான் பாடுபடுவேன்.

மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் மேம்பாட்டிற்காக பல ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. ஆனால் ஆஸ்பத்திரிகளின் நிலை அதேபோல்தான் உள்ளது. நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசு ஆஸ்பத்திரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கான படுக்கையில் படுத்து தூங்கினார். இந்த ஆய்வின்போது ஆஸ்பத்திரி டீன் ரவி மற்றும் உயர் அதிகாரிகள் மந்திரி ஸ்ரீராமுலுவுடன் இருந்தனர்.


Next Story