திருவள்ளூரில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்


திருவள்ளூரில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 26 Sep 2019 10:15 PM GMT (Updated: 26 Sep 2019 7:00 PM GMT)

திருவள்ளூரில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் அரசு மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையானது பள்ளி, கோவில் மற்றும் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் இருப்பதாக கூறி அந்த பகுதி மக்கள் அந்த மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுக்கடையை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மோகனா தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ரமா, மாவட்ட பொருளாளர் பத்மா, பகுதி தலைவர் விஜயா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் மோகனா, கிளை செயலாளர் பூங்கோதை என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மதுக்கடை முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு கடையை உடனடியாக அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் மாதர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் 50-க்கும் மேற்பட்ட பெண்களை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அந்த வழியாக நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story