கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 பேரிடம் ரூ.56 லட்சம் மோசடி 3 பேர் கைது; பெண்ணுக்கு வலைவீச்சு


கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 பேரிடம் ரூ.56 லட்சம் மோசடி 3 பேர் கைது; பெண்ணுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Sep 2019 10:30 PM GMT (Updated: 26 Sep 2019 8:04 PM GMT)

கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 15 வாலிபர்களிடம் ரூ.56 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண்ணை போலீசார் தேடிவருகிறார்கள்.

சென்னை,

சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூரை சேர்ந்த வினோத்குமார் (38) என்பவரும், அவரது மனைவி கலைவடிவு (35) என்பவரும் சேர்ந்து, சென்னை அண்ணாநகரில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தினார்கள்.

கனடா நாட்டில் படித்த இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு இருப்பதாக அவர்கள் ஆன்லைன் மூலமாக விளம்பரப்படுத்தினார்கள்.

வேலைக்காக ரூ.50 லட்சம் பணம் கேட்டனர். நானும் பணம் கொடுத்தேன். இதேபோல 15 பேர்களிடம் ரூ.56 லட்சம் வரை பணம் வசூல் செய்தனர். வேலைக்காக எங்களை கனடா நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் முறையான விசா இல்லாததால் 10 நாட்களில் நாங்கள் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டோம்.

அதன்பிறகு அர்மேனியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைத்தனர். முறையான விசா இல்லாததால் அங்கிருந்தும் திருப்பி அனுப்பப்பட்டோம்.

பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் ரூ.56 லட்சம் மோசடி செய்து பணத்தை சுருட்டிய வினோத்குமார், அவரது மனைவி மீதும் மற்றும் அவர்களது அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், ரெஜினா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மோசடியில் ஈடுபட்ட வினோத்குமாரும், அவரிடம் வேலை பார்த்த திருவொற்றியூரை சேர்ந்த ராஜூ (41), தாம்பரத்தை சேர்ந்த பிரின்ஸ் (40) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் 3 பேரும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வினோத்குமாரின் மனைவி கலைவடிவு தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story