‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் ஆவணங்களை மாற்ற முயற்சி
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது தொடர்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் 3 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஆவணங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தேனி,
‘நீட்’ தேர்வில் சென்னை மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபரே, கலந்தாய்வில் பங்கேற்றதும், அதே நபரே கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் பங்கேற்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தேர்வு, முதல் மாணவர் சேர்க்கை வரை வேறு ஒரு நபர் பங்கேற்ற நிலையில், வகுப்புகள் தொடங்கிய நாளில் இருந்து உதித்சூர்யா தனது படிப்பை தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த 11-ந்தேதி மற்றும் 13-ந்தேதிகளில் அசோக் கிருஷ்ணா என்பவர் பெயரில் புகார் வந்துள்ளது. அதன்பேரில் கல்லூரியில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து கல்லூரி முதல்வர் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 18-ந்தேதி புகார் செய்தார்.
இந்த சம்பவத்தில் கல்லூரியில் மாணவர் உதித்சூர்யா தொடர்பான ஆவணங்களில் திருத்தம் செய்யவும், சில ஆவணங்களை மாற்றம் செய்யவும் முயற்சி நடந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் ஏற்கனவே கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசு ஆகியோர் நேற்று காலை 8.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் துணை சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஸ்குமார் தலைமையில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
கல்லூரி முதல்வரிடம் தனி அறையில் விசாரணை நடத்தினர். அப்போது 11-ந்தேதி மற்றும் 13-ந்தேதிகளில் புகார் வந்த நிலையில், விசாரணை நடத்தி ஆள்மாறாட்டம் என்று தெரியவந்த நிலையில், உடனே போலீசில் புகார் அளிக்காமல் 18-ந்தேதி வரை காத்திருக்க காரணம் என்ன? க.விலக்கு போலீஸ் நிலையத்தில் 18-ந்தேதி அளித்த புகாரில், 13-ந்தேதி என்று முன்தேதியிட்டு அளிக்க காரணம் என்ன? என்று விசாரித்தனர்.
மேலும் மாணவர் சேர்க்கையின் போது பங்கேற்ற நபருக்கும், வகுப்புகள் தொடங்கும் போது பங்கேற்ற நபருக்குமான வேறுபாட்டை கண்காணிக்க தவறியது ஏன்? வகுப்புகள் தொடங்கும் போது மாணவர்கள் குறித்த விவரங்கள் சரிபார்ப்பு பணிகள் எதுவும் நடந்ததா? என்பது போன்ற சரமாரியான கேள்விகளை எழுப்பி அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாணவர் உதித்சூர்யா கல்லூரியில் படிப்பை தொடர பிடிக்கவில்லை என்று எழுதி கொடுத்த கடிதத்தில் அவர் குறிப்பிட்ட தேதியும், கல்லூரி முதல்வர் கையொப்பமிட்ட தேதியிலும் வேறுபாடு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பேரிலும் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 11.30 மணி வரை கல்லூரி முதல்வரிடம் நடத்தப்பட்டது.
மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் உதித்சூர்யாவின் பெயர் வரிசை எண் 98-ல் உள்ளது. இதில், 12-ந்தேதி எடுக்கப்பட்ட வருகைப்பதிவேட்டில் உதித்சூர்யா வகுப்பில் பங்கேற்றதாக (ஆங்கிலத்தில் ‘பி’ குறியீடு) குறிப்பிட்டு, பின்னர் அதை வரவில்லை என்று (ஆங்கிலத்தில் ‘ஏ’ குறியீடு) திருத்தம் செய்துள்ள தகவல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதே வருகைப்பதிவேட்டில் 19-ந்தேதி உதித்சூர்யா வரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த திருத்தம் மேற்கொள்ள என்ன காரணம்? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story