திருவள்ளூர் அருகே பூஜையில் மர்மப்பொருள் வெடித்து ஜோதிடர் பலி


திருவள்ளூர் அருகே பூஜையில் மர்மப்பொருள் வெடித்து ஜோதிடர் பலி
x
தினத்தந்தி 27 Sept 2019 5:00 AM IST (Updated: 27 Sept 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பூஜையில் மர்மப்பொருள் வெடித்து ஜோதிடர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஏரையா மங்கலம் கிராமம். இங்கு சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 45) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அந்த வீட்டில் ஜோதிடம் பார்த்தும் சித்த வைத்தியங்கள் செய்தும் வந்தார்.

நேற்று முன்தினம் சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த லாவண்யா (50) எரையாமங்கலம் பகுதிக்கு வந்து ஜோதிடரான கோவிந்தராஜ் வீட்டில் தங்கியுள்ளார். அன்று இரவு கோவிந்தராஜ் தன் வீட்டில் உள்ள பூஜை அறையில் பொருட்களை வைத்து பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை செய்து கொண்டிருந்த போது அவர் லாவண்யாவிடம் பூஜைக்கு தேவையான பொருட்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து லாவண்யாவும் பக்கத்து அறைக்கு சென்று பூஜை பொருளை கொண்டு வரச்சென்றார். சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது.

லாவண்யா ஓடி வந்து பார்த்தபோது அங்கு இருந்த கோவிந்தராஜ் உடலில் தீப்பற்றி கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயில் கருகிய கோவிந்தராஜை மீட்டனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்மப்பொருள் வெடித்து பலியான கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து அங்கு இருந்த லாவண்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் பக்கத்து அறையில் இருந்ததால் இந்த விபத்தில் இருந்து தப்பினார். பூஜை அறையில் இருந்த என்ன பொருள் வெடித்தது? அது வெடிகுண்டா என்ற விவரங்கள் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் சென்று அங்கு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story