7 மாத நிலுவை சம்பளம் கேட்டு பி.எஸ்.என்.எல்.ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


7 மாத நிலுவை சம்பளம் கேட்டு பி.எஸ்.என்.எல்.ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Sep 2019 10:45 PM GMT (Updated: 26 Sep 2019 9:13 PM GMT)

7 மாத நிலுவை சம்பளம் கேட்டு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கினர்.

திருச்சி,

பி.எஸ்.என்.எல். திருச்சி கோட்டத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், குளித்தலை, முசிறி உள்ளிட்ட இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் 400-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். முழு நேரப்பணி, பகுதிநேர பணி என வேலைபார்த்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

கேபிள் பழுது, தண்ணீர் புகுந்த இடத்தை சீரமைப்பது, கம்ப்யூட்டர் இயக்கும் பணி, துப்புரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் செய்து வந்தனர். இதுதொடர்பாக ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், குடும்பத்துடன் தர்ணா என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தியும் பலன் அளிக்கவில்லை.

3 நாள் வேலைநிறுத்தம்

இந்த நிலையில் நேற்று முதல் நாளை(சனிக்கிழமை) வரை 3 நாட்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, நேற்று 80 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் திருச்சி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தை பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேவராஜ் தொடங்கி வைத்தார். ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சுந்தர்ராஜ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முபாரக்அலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 7 மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பணி நேரத்தை குறைப்பு மற்றும் ஆள்குறைப்பு செய்வதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பப்பட்டது.

பணி பாதிப்பு

இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் முபாரக் அலி கூறுகையில், ‘கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் வீட்டு வாடகை கொடுக்காமலும், சாப்பாட்டுக்கு கந்து வட்டிக்கு பணம் வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் வருங்கால வைப்புநிதி மற்றும் இ.எஸ்.ஐ.-க்கும் பணம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக, மருத்துவ செலவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கேபிள் பழுது சரிபார்ப்பது, வாடிக்கையாளர் சேவை மையத்தில் கம்ப்யூட்டர் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பி.எஸ்.என்.எல். நிர்வாகம் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்.

Next Story