குள்ளஞ்சாவடி அருகே, 2 குழந்தைகளை கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை - கடலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
குள்ளஞ்சாவடி அருகே 2 குழந்தைகளை கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர்,
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கோதண்டராமபுரம் புதுக்குளம் காலனியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் வெங்கடேசன். இவருடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், சாய்பாபு(வயது 43) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கோஜன்(7) கோகுல்(6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வெங்கடேசன் உடல்நலக்குறைவினால் இறந்து விட்டார். இதனால் சாய்பாபு தனது 2 குழந்தைகளுடன் மாமனார் சீனிவாசன் வீட்டிலேயே வசித்து வந்தார். குடும்ப செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் சாய்பாபு பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அவரால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியவில்லை. இதனால் கடன்காரர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் சாய்பாபு தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுப்பிரமணியபுரத்துக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அங்கேயும் கடன்காரர்கள் அவரை தேடி வந்து கடனை திருப்பித்தருமாறு கேட்டதால் சாய்பாபு திம்மராவுத்தன்குப்பம் காலனியில் உள்ள தனது நாத்தனார் பழனியம்மாள் வீட்டுக்கு சென்று தங்கினார்.
கொலை
இந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக கடும் மனஉளைச்சலில் இருந்த அவர் தனது 2 மகன்களையும் கொன்று விட்டு எங்கேயாவது தலைமறைவாக வாழலாம் என முடிவு செய்தார். அதன்படி கடந்த 17-7-2017 அன்று சாய்பாபு தனது மகன்களை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச்செல்வதாக நாத்தனார் பழனியம்மாளிடம் கூறி விட்டு மகன்களை அழைத்துச்சென்றார். இதையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள தனுசு என்ற தனசேகரன் என்பவரது கிணற்றுக்குள் இரு மகன்களையும் தள்ளியுள்ளார். இதனை அதே ஊரைச்சேர்ந்த தேன்மொழி மற்றும் கண்ணுசாமி ஆகியோர் பார்த்து கூச்சலிடவே பயத்தில் சாய்பாபுவும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் அவர் கிணற்றின் சுவரை பிடித்துக்கொண்டதால் உயிர் பிழைத்தார். அவரது இருமகன்களும் கிணற்றில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து சாய்பாபுவை பொதுமக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இருகுழந்தைகளின் உடல்களையும் குள்ளஞ்சாவடி போலீசார் கைப்பற்றினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபு மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்த குற்றத்துக்காக சாய்பாபுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், தற்கொலை முயற்சிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story