கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கில் இன்று ஆஜராக முடிவு: அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் சரத்பவார் அனுமதிக்கப்படுவாரா?
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன் சரத்பவார் இன்று ஆஜராகிறார். அவர் உள்ளே அனுமதிக்கப்படுவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை,
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு மும்பை ஐகோர்ட்டு போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதனால் மும்பை போலீசார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார் மற்றும் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலையில் சரத்பவார் நேற்று தனது டுவிட்டர் பதிவில், “நாளை (அதாவது இன்று) மும்பை பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கப்போகிறேன். அதனால் அந்த அலுவலகம் முன் தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. பொது மக்களுக்கு எந்தவிதமான சிரமத்தையும் ஏற்படுத்தக்கூடாது” என்றார்.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், நாளை(இன்று) சரத்பவார் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பவில்லை. எனவே நாங்கள் அவரை உள்ளே அனுமதிக்க முடியாது. தேவைப்படும் நேரத்தில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்” என்றார்.
சரத்பவார் ஆஜராவதாக கூறிய நிலையில் அமலாக்கத்துறையின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story