எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதில் சிக்கல்: காங்கிரசில் சித்தராமையாவை ஓரங்கட்ட முயற்சி


எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதில் சிக்கல்: காங்கிரசில் சித்தராமையாவை ஓரங்கட்ட முயற்சி
x
தினத்தந்தி 28 Sept 2019 5:45 AM IST (Updated: 28 Sept 2019 5:45 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசில் சித்தராமையாவை ஓரங்கட்ட முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக சித்தராமையா வலம் வந்து கொண்டிருக்கிறார். காங்கிரசை பொறுத்தவரையில் முதல்-மந்திரியாக இருப்பவர், தேர்தலில் தோற்றுவிட்டால் அப்படியே ஒதுக்கிவிடுவார்கள். பங்காரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்பமொய்லி, தரம்சிங் உள்ளிட்டோர் தேர்தலுக்கு பிறகு படிப்படியாக ஒதுக்கப்பட்டனர். வீரப்பமொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் தேசிய அரசியலில் கால் பதித்தனர். ஆனால் எஸ்.எம்.கிருஷ்ணா நீண்ட காலம் நீடிக்கவில்லை. அவரை முழுமையாக ஒதுக்கியதால், பா.ஜனதாவுக்கு தாவினார்.

2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சி காலத்தை சித்தராமையா நிறைவு செய்தார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. அதில் தோல்வியை சந்தித்தபோதும், காங்கிரசில் சித்தராமையாவின் செல்வாக்கு மட்டும் இதுவரை குறையவில்லை.

குருபா சமுதாயத்தை சேர்ந்த சித்தராமையா, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவராக பார்க்கப்படுகிறார். அவர் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக திகழ்கிறார். காங்கிரசில் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்த மல்லிகார்ஜுன கார்கே போன்ற பெரிய தலைவர்களையும் பின்னுக்கு தள்ளி, கட்சியில் சேர்ந்த ஆறே ஆண்டுகளில் முதல்-மந்திரி பதவியை சித்தராமையா பிடித்தார். இது மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை.

சித்தராமையா நகைச்சுவை கலந்து நயமாக பேசி மக்களை ஈர்க்கும் திறன் கொண்டவர். அதனால் தேர்தல் தோல்விக்கு பிறகும் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி வழங்கினார். சித்தராமையா தற்போது கட்சியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற முக்கியமான விஷயங்களில் அவர் எடுக்கும் முடிவே இறுதியாக உள்ளது.

இந்த நிலையில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பேசிய மூத்த தலைவர் கே.எச்.முனியப்பா, சித்தராமையாவுக்கு எதிராக கூக்குரல் எழுப்பினார்.

சித்தராமையா சர்வாதிகாரியை போல் செயல்படுவதாகவும், என்னை போன்ற மூத்த தலைவர்களை மதிப்பது இல்லை என்றும் புகார் கூறினார். கே.எச்.முனியப்பாவின் இந்த புகாருக்கு இன்னொரு மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் ஆதரவு தெரிவித்தார். இந்த விஷயத்தில் சித்தராமையாவுக்கும், கே.எச்.முனியப்பாவுக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது.

இது காங்கிரஸ் கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற சித்தராமையா ஏற்கனவே முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.எச்.முனியப்பா, பி.கே.ஹரிபிரசாத், பரமேஸ்வர், வீரப்பமொய்லி போன்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து சித்தராமையாவுக்கு எதிராக காங்கிரஸ் மேலிடத்திடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் சித்தராமையாவை கட்சியில் இருந்து ஓரங்கட்ட முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் சித்தராமையாவுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

Next Story