தேவதானப்பட்டி அருகே, சரக்கு வேன் கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் பலி
தேவதானப்பட்டி அருகே சரக்குவேன் கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தேவதானப்பட்டி,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 17 பேர் பெரியகுளம் கும்பக்கரை பகுதியிலுள்ள தென்னந்தோப்பிற்கு உரம் வைக்கும் வேலைக்கு சரக்கு வேனில் சென்றனர். வேனில் உரமூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சரக்குவேனை மஞ்சளாறை சேர்ந்த செல்லப்பாண்டி ஓட்டினார்.
பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின்ரோடு தர்மலிங்கபுரம் அருகே சென்றபோது சரக்குவேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் உரமூட்டைகளுடன் வேனில் சென்றவர்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் மஞ்சளாறை சேர்ந்த மணிகண்டன் (வயது 25), முத்துப்பாண்டி (35) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் வேனில் வந்தவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றி அறிந்தவுடன் தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட் குரு, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அய்யர் என்ற தொழிலாளி பரிதாபமாக (40) இறந்தார்.
மேலும் டிரைவர் செல்லப்பாண்டி, கருப்பு (50), சின்னன் (60), ஜெயக்கொடி (50), செல்வம் (35), முருகேசன் (32), மணிகண்டன் (28), மயில்சாமி (30), அருண் (28), சின்னு (50) உள்பட 14 பேர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் சின்னு மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இறந்தவர்களின் உடல்கள் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் இறந்த மணிகண்டனுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகியுள்ளது. ஒரே ஊரை சேர்ந்த 3 பேர் விபத்தில் இறந்தது மட்டுமில்லாமல் மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், மஞ்சளாறு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
சரக்குவேன் அதிகளவு உரமூட்டைகளுடன் தேவதானப்பட்டி மெயின்ரோட்டில் வரும்போது ஏற்கனவே ஒரு முறை விபத்துக்குள்ளாக நேரிட்டது. அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வேனில் உள்ள பாரத்தை குறைக்குமாறு சத்தம்போட்டுள்ளனர். எனினும் டிரைவர் அதை கண்டுகொள்ளாமல் ஓட்டியதால் சரக்குவேன் விபத்துக்குள்ளாக நேரிட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story