பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2019 10:45 PM GMT (Updated: 28 Sep 2019 6:37 PM GMT)

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கீழச்சேரியில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில் 417 எக்டேர் நிலத்தில் 1,500 விவசாயிகள் நெல் சாகுபடி செய்து இருந்தனர். இதற்காக மழவராயநல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2018-2019-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து இருந்தனர். கண்டமங்கலம் கிராமத்தில் நெல் பயிர்கள் அனைத்தும் கஜா புயலில் சேதமடைந்துவிட்டன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மற்ற சுற்று வட்டார கிராமங்களுக்கு பயிர்க்காப்பிட்டு தொகை கிடைத்தது. ஆனால் கண்டமங்கலம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டூர் வேளாண்மை அலுவலரிடம் விவசாயிகள் நேரில் சென்று பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலைமறியல்

இதேபோல 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையும், இந்த விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று கீழச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கோட்டூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன், வேளாண்மை அலுவலர் சீனிவாசன், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்னும் 15 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் அதிகாரியை அணுகி பயிர்க்காப்பீட்டு தொகையை பெற்று தருகிறோம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதுவரை போராட்டம் நடத்தமாட்டோம் என விவசாயிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தினால் மன்னார்குடி-திருத் துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story