நாட்டு சர்க்கரையில் வேதி பொருட்கள் கலப்பு? மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு


நாட்டு சர்க்கரையில் வேதி பொருட்கள் கலப்பு? மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Sept 2019 4:30 AM IST (Updated: 29 Sept 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு சர்க்கரையில் வேதி பொருட்கள் கலக்கப்பட்டதா? என்று கவுந்தப்பாடி மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியன உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கவுந்தப்பாடி, சித்தோடு ஆகிய இடங்களில் நடக்கும் சர்க்கரை மார்க்கெட் மூலமாக வெல்லம், நாட்டு சர்க் கரை மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டு சர்க்கரை, வெல்லத்தில் வேதி பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்றன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டி.கலைவாணி மற்றும் அதிகாரிகள் கவுந்தப்பாடி சர்க்கரை மார்க்கெட்டில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்குள்ள குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை எடுத்து பார்த்தனர். அதில் வேதி பொருட்கள், அஸ்கா கலந்து தயாரிக்கப்பட்டதாக என அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 9 மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நாட்டு சர்க்கரையில் ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட் உள்ளிட்ட வேதி பொருட்கள், அஸ்கா போன்றவற்றை கலந்து தயாரிக்கக்கூடாது என்று நாட்டு சர்க்கரை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிப்பு ஆலைகளிலும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வின்போது அஸ்கா, வேதி பொருட்கள் கலந்து நாட்டு சர்க்கரை தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறி தரம் குறைவான நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரித்து விற்பனை செய்த காரணத்துக்காக 17 வழக்குகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 5 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு நாள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story