கடமலைக்குண்டு அருகே, மின்சாரம் பாய்ந்து சிறப்பு காவல்படை போலீஸ்காரர் பலி
கடமலைக்குண்டு அருகே, மின்சாரம் பாய்ந்து சிறப்பு காவல்படை போலீஸ் காரர் பலியானார்.
கடமலைக்குண்டு,
கடமலைக்குண்டு அருகே உள்ள மூலக்கடை கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வம். இவருடைய மகன் சுந்தரபாண்டியன்(வயது 27). இவர் சிறப்பு காவல் படை போலீஸ் காரராக பழனியில் பணி புரிந்து வந்தார். சுந்தரபாண்டியன் கடந்த 22-ந்தேதி விடுமுறையில் மூலக்கடை கிராமத்திற்கு வந்திருந்தார்.
அங்கு இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் அந்த புதிய வீட்டின் மாடியில் உள்ள சுவர்களை மின்மோட்டார் மூலம் தண்ணீரால் நனைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் மின்மோட்டாரை நிறுத்தும் போது எதிர்பாராதவிதமாக சுந்தரபாண்டியன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடமலைக்குண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுந்தரபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சுந்தரபாண்டியன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மூலக் கடை கிராமத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த இறுதி ஊர்வலத்தின் போது தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க சுந்தரபாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story