சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி பாதை பிரச்சினை: அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி பாதை வசதி கேட்டு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
தேனி அருகே சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி மக்கள் பாதை வசதி கேட்டு கடந்த 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். பின்னர் நில அளவீடு செய்து பொதுப்பாதையை மீட்டுக் கொடுப்பதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக மக்கள் கைவிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து இந்திரா காலனி மக்களுக்கு பொதுப்பாதையை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தியும், பாதை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் தேனி அல்லிநகரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி, தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், தி.மு.க. நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., பகுஜன் சமாஜ் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சி நிர்வாகிகள் மற்றும் செங்கதிர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story