கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிட வேண்டும் - சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் அறிவுரை
கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிட வேண்டும் என்று, சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களுக்காக மகப்பேறு நிதிஉதவி திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம், அம்மா குழந்தைநல பரிசு பெட்டகம் உள்ளிட்ட திட்டங்களை கூறலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும். அப்போது தான் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் எந்தவித குறைபாடும் இன்றி பிறக்கும். மேலும் கர்ப்பிணிகள் மனநிலை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டே ஏழ்மை நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்காக சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இது ஒரு விழா மட்டும் அல்ல. குழந்தை வளர்ப்பு குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 480 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள்-குங்குமம், முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், குழந்தைகளுக்கு பாலூட்டும் சங்கு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 5 வகையான கலவை சாதம் மற்றும் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேடும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், நகர மருத்துவ அலுவலர் அனிதா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ராஜ்நகரில் ரூ.7 லட்சத்தில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் ரூ.2½ லட்சத்தில் 30 தெருவிளக்குகள் வாங்கப்பட்டு மின்கம்பங்களில் பொருத்தப்பட்டன. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு மின்மாற்றி மற்றும் தெருவிளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story