அடுத்த மாதம் முதல் அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் தொடக்கம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


அடுத்த மாதம் முதல் அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் தொடக்கம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 28 Sep 2019 11:15 PM GMT (Updated: 29 Sep 2019 3:15 AM GMT)

அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் நீதிபோதனை வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கோவை, 

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஶ்ரீ சக்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் ‘வழிகாட்டிக்கு வாகைசூடல்’ எனும் தலைப்பில் ஆசிரியர் தின விழா கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.கந்தசாமி, ஆறுக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி தலைவர் செ.தங்கவேலு வரவேற்று பேசியதாவது:-

தமிழக பள்ளி பாடத்திட்டம்தான் தற்போது இந்தியாவின் சிறந்த பாடத்திட்டமாக விளங்குகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் நலனில் முழு அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. நீட் உள்பட அனைத்து போட்டித் தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன் முறையாக கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி இங்கு தான் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

மாணவர்கள் மீது பெரும் அக்கறை கொண்டு பெரும்பாலான ஆசிரியர்கள் செயல்படு கிறார்கள். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். கல்வி அறிவுடன் பொதுஅறிவையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும். புத்தகப்படிப்பை மட்டும் படித்து நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் பொதுஅறிவு, இதர திறன்கள் இல்லாததால் வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. ஆசிரியர்கள், பெற்றோராகவும் இருந்து மாணவர்களுக்கு தைரியத்தையும், ஒழுக்கத்தையும் போதித்து நல்வழிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கொங்கு மண்டலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக செய லாற்றும் 200 தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் விருதுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 16 துறைகளில் 9 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். ஆனால் கல்வித்துறையில் மட்டும் 3 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். மிகச்சிறிய கிராமங்களுக்கும் கல்வியை கொண்டு சேர்த்துள்ளோம். முன்பு கூட்டுக்குடும்பங்களாக இருந்த போது குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நீதி போதனைக் கதைகள் கூற பெரியவர்கள் இருந்தனர்.

ஆனால் இப்போது தனிக்குடும்பங்கள் தான் அதிகமாக உள்ளன. தாய் மற்றும் தந்தை இருவரும் பணிபுரியும் சூழலில் குழந்தைகள் இருப்பதால் கதைகளின் வழியே குழந்தைகளுக்கு கிடைத்த நீதி போதனைகள் இல்லாமல் போய்விட்டது. எனவே அடுத்த மாதம்(அக்டோபர்) முதல் அரசுப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும்.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விரைவில் தற்காப்பு கலைகள் கற்றுத்தரப்படும். மாணவிகளுக்கு பிறர் தொடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலணிகளுக்கு பதிலாக ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க திட்டமிட்டு உள்ளோம். சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. எனவே ஒரு மாணவன் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 மரங்களாவது நட வேண்டும். அதற்கு மதிப்பெண்கள் வழங்கவும் பரிசீலித்து வருகிறோம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை நாம் அமைத்து கொள்ள வேண்டும். பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் மாணவர்கள் பயன்பெறும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கல்லூரியின் செயலாளர் தீபன் தங்கவேலு, துணை செயலாளர் சீலன் தங்கவேலு, முதல்வர் பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story