ஆறுமுகநேரி அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் பரிதாப சாவு


ஆறுமுகநேரி அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 29 Sept 2019 4:45 AM IST (Updated: 29 Sept 2019 8:45 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி அருகே தசரா விழாவுக்கு மாலை அணிய சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி சாந்திநகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய ஒரே மகன் மணிசங்கர் (வயது 18). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த முத்துக்குமார் மகன் அஜித்குமார் (16). இவர் சாயர்புரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மணிசங்கர், அஜித்குமார் ஆகியோர் கடந்த ஆண்டு குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்தனர். அதேபோல் இந்த ஆண்டும் மாலை அணிய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் அதே தெருவில் உள்ள மற்ற 4 நண்பர்களுடன் சேர்ந்து நேற்று காலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு 3 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டனர்.

மணிசங்கர் தனது மோட்டார் சைக்கிளில் அஜித்குமாரை அழைத்து கொண்டு சென்றார். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், ஆறுமுகநேரி அருகே உள்ள சீனந்தோப்பு விலக்கு பகுதியில் சென்றது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மணிசங்கர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மணிசங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். அஜித்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் பின்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த அவரது நண்பர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான மணிசங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான சாத்தான்குளம் அருகே உள்ள கல்லகுறிச்சியை சேர்ந்த சக்திவேல் (48) என்பவரை கைது செய்தனர். தசரா விழாவுக்கு மாலை அணிய மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் லாரி மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story