தமிழ்நாடு-கர்நாடகத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை - வி.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி பேச்சு
தமிழ்நாடு-கர்நாடகத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்தேன், முடியவில்லை என்று வி.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் மத்தியமந்திரி நிதின்கட்காரி பேசினார்.
காட்பாடி,
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குனர் சந்தியாபெண்ட ரெட்டி, உதவித் துணைத்தலைவர் காதம்பரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு வி.ஐ.டி.வளாகத்தில் 10 ஏக்கரில் ரூ.300 கோடியில் கட்டப்படும் ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல்நாட்டி, பட்டம்பெறும் 53 மாணவ- மாணவிகளுக்கு தங்க பதக்கங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வி.ஐ.டி. கல்விநிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் சிறந்த கல்விநிறுவனமாக திகழ்கிறது. இதனை இந்த அளவுக்கு கடினமாக உழைத்து வளர்த்த வேந்தர் விசுவநாதனை பாராட்டுகிறேன். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். அறிவுதான் உங்களுக்கு மூலதனம். உங்களுக்கு கல்வி அறிவை பள்ளி மற்றும் கல்லூரி வழங்கியது. அதனை வைத்து நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
நம்முடைய நாட்டின் வளர்ச்சி என்பது தொழில்துறை, பொதுத்துறை மற்றும் விவசாயத்துறையில் உள்ளது. 65 சதவீதம்பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயத்திற்காக மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்யவேண்டும். இதன்மூலம் விவசாயிகளின் வறுமையை போக்கலாம். நீங்கள்தான் இந்தியாவின் எதிர்கால தூண்கள். உங்களுடைய குறிக்கோள் மிகவும் முக்கியம். பணியின்போது உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்தால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். குழுவாக சேர்ந்து பணிபுரியவேண்டும். உங்களுக்கு தலைமை பண்புதேவை, முடிவெடுக்கும் திறன்வேண்டும். நீங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட இது உங்களுக்கு சரியான நேரம்.
தகவல்தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்குஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். படித்து முடித்த உடன் எல்லோரும் வேலைக்கு செல்லவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் என்னைகேட்டால் நீங்கள் பணிக்கு செல்லாமல் ஒரு தொழில்முனைவோராக உருவாகவேண்டும். நீங்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும். தொழில்கள் தற்போது நலிவடைந்துள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் அதைபற்றி நீங்கள் கவலைப்படதேவையில்லை. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தால் வெற்றிபெறலாம்.
எல்லோரையும் அரவணைத்துசெல்லும் பண்பு வேண்டும். தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நானும் ஒரு விவசாயிதான். எங்கள் மாநிலத்தில் 10 ஆயிரம் விவசாய சங்கங்கள் உள்ளன. பால்பொருட்களில் இருந்து புதிய புதிய ஐஸ்கிரீம்கள், பர்பிகள் கண்டுபிடித்து அவை தற்போது நல்லமுறையில் விற்பனையாகி வருகிறது. மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதில் ஆர்வம்காட்டவேண்டும். விவசாயத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நவீனதொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் அதிசயங்களை உண்டாக்கலாம்.
மழைநீர் வீணாக கடலில் சென்றுகலக்கிறது. அதனை தடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு-கர்நாடகாவின் தண்ணீர்பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்தேன். முடியவில்லை. இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு ஒருநாள் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில் வி.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் 55 நாடுகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கல்வி கற்கின்றனர். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 1,500 மாணவ- மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். இங்கு 51 மொழிகள் பேசுகின்றனர். 5 ஆயிரம் ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உள்ளோம். இது மிகப்பெரிய உதவித்தொகை. இதற்கு மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவிபுரிந்தனர்.
ஸ்டார்ஸ் திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஒரு மாவட்டத்துக்கு 2 பேர் வீதம் மாணவ- மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு கல்வி, உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு படித்த 7,022 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கவுரவ விருந்தினராக விப்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி விஷ்வாஸ் தீப் கலந்துகொண்டு பேசுகையில் விப்ரோ நிறுவனமும், வி.ஐ.டி.யும் 25 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றுகிறோம். வி.ஐ.டி. மாணவர்களுக்கு 15 ஆண்டுகளாக வேலைவழங்கி வருகிறோம். கடந்த ஆண்டு 240 மாணவ- மாணவிகளுக்கும், இந்த ஆண்டு 270 பேருக்கும் வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். தண்ணீர் பிரச்சினை, புவி வெப்பமயமாதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சி செய்யுங்கள். புதிய புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.
விழாவில் வி.ஐ.டி. இணைதுணை வேந்தர் நாராயணன், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் இல.கணேசன், முகம்மதுஜான் எம்.பி., முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story