பா.ஜனதா, சிவசேனா இடையே தொகுதி பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும்: உத்தவ் தாக்கரே பேச்சு
பா.ஜனதா, சிவசேனா கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், சிவசேனா தொண்டரை முதல்-மந்திரியாக்க சபதம் செய்திருப்பதாகவும் உத்தவ் தாக்கரே பேசினார்.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் அறிவித்தன. ஆனால் சரிசமமான தொகுதியை சிவசேனா கேட்கிறது. மேலும் முதல்-மந்திரி பதவியையும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்துகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, இதற்கு பா.ஜனதா சம்மதம் தெரிவித்ததாக சிவசேனா கூறி வருகிறது.
ஆனால் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றி மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவு ரத்து நடவடிக்கையால் தங்கள் கட்சிக்கு செல்வாக்கு உயர்ந்து இருப்பதாக பா.ஜனதா கருதுகிறது. இதனால் சிவசேனாவை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட பா.ஜனதா விரும்புகிறது.
இந்த பிரச்சினைகள் காரணமாக இரு கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் இரு கட்சிகளும் தனித்து தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான நிலையில் சிவசேனா நிர்வாகிகள் மற்றும் 288 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களை நேற்று மும்பைக்கு அழைத்து கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை நடத்தினார்.
பாந்திரா ரகுங் சாரதா அரங்கில் நடந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
சிவசேனா தொண்டர் ஒருவரை மாநில முதல்-மந்திரியாக்குவேன் என்று நான் பால்தாக்கரேயிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். அதை நிறைவேற்ற சபதம் ஏற்கிறேன்.
மராட்டியத்தில் சிவசேனாவுக்கு அதிகாரம் வேண்டும். எனவே 288 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களை இங்கு அழைத்து உள்ளேன். அனைத்து தொகுதிகளிலும் சிவசேனாவை பலப்படுத்த விரும்புகிறேன்.
சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் பேசி வருகிறோம். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும்.
சட்டசபை தேர்தலில் கூட்டணி ஏற்பட்டால் பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் வெற்றியை சிவசேனா உறுதி செய்யும். இதேபோல பா.ஜனதாவின் ஆதரவு சிவசேனா வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டும்.
சிவசேனா போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் நிறைவு பெற்று விட்டன. கட்சி தொண்டர்கள் கட்சிக்கும், கூட்டணி கட்சிக்கும் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும்.
கட்சி தொண்டர்கள் என்னை நம்பி என்னுடன் இருந்தால் நான் நம்பிக்கையுடன் அரசியல் பாதையில் முன்னேற முடியும்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரை கிண்டல் செய்யும் வகையில், நான் அரசியலை விட்டு விலகி விவசாயம் செய்யமாட்டேன். சிவசேனா தொண்டராக உழைப்பேன் என்று உத்தவ் தாக்கரே பேசினார்.
Related Tags :
Next Story