‘சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்கால் வேதனை அடைந்தேன்’ எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா குறித்து அஜித்பவார் உருக்கம்


‘சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்கால் வேதனை அடைந்தேன்’ எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா குறித்து அஜித்பவார் உருக்கம்
x
தினத்தந்தி 29 Sep 2019 3:58 AM GMT (Updated: 29 Sep 2019 3:58 AM GMT)

‘‘சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததால் வேதனை அடைந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன்’’ என அஜித்பவார் உருக்கமாக கூறினார்.

மும்பை,

மும்பை ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் வங்கி இயக்குனர்கள் உள்பட 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த வழக்கை அமலாக்கத்துறையும் கையில் எடுத்தது.

அமலாக்கத்துறை இந்த வழக்கில் கூடுதலாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பெயரையும் சேர்த்தது. இந்த சம்பவம் மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சரத்பவாரின் அண்ணன்மகனான முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரது ராஜினாமாவை சட்டசபை சபாநாயகர் ஹரிபாவு பாக்டே ஏற்றுக்கொண்டார்.

சரத்பவாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் அஜித் பவார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் பரவின. அஜித்பவார் எதற்கு பதவியை ராஜினாமா செய்தார் என்பது தனக்கு தெரியாது என சரத்பவார் கூறியது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இந்தநிலையில் அஜித்பவார் நேற்று சரத்பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருக்கும் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவும் கலந்து கொண்டார். குடும்பத்தினர் தவிர யாரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

அப்போது அஜித் பவார் தான்எம்.எல்.ஏ. பதவியைராஜினாமா செய்ததற்கான காரணத்தை சரத்பவாரிடம் விளக்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்பவார், ‘‘கவலைப்படுவதற்கு எதுவுமில்லை, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அவரே (அஜித் பவார்) உங்களிடம் கூறுவார்’’ என்றார்.

இதையடுத்து மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அஜித் பவார் கூறியதாவது:- மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் சரத்பவாரின் பெயரையும் சேர்த்தது குறித்து அவரிடம் பேச 3 நாட்களுக்கு முன் புனேயில் இருந்து புறப்பட்டேன். பலத்த மழை காரணமாக இங்கு வந்து அவரை சந்தித்து பேச முடியவில்லை. நேற்று முன்தினம் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் ராஜினாமா முடிவை எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

முதலில் ரூ.1088 கோடி ஊழல் நடந்ததாக கூறினர். தற்போது ரூ.25 ஆயிரம் கோடி என்கிறார்கள். மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.11 ஆயிரத்து 500 முதல் 12 ஆயிரம் கோடி வரை மட்டுமே டெபாசிட் நடந்து இருக்கிறது. அப்போது எப்படி ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் என்று கூறமுடியும். மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ரூ.285 கோடி நிகர லாபத்துடன் செயல்பட்டு உள்ளது.

சரத்பவாருக்கும் இந்த வங்கிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அந்த வங்கியில் பணபரிவர்த்தனை செய்ய அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இப்போது தான் அவரது பெயர் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. நான் துணை முதல்-மந்திரி வரை உயர்ந்தது சரத்பவாரால் தான்.

என்னால் தான் அவர் இந்த வயதில் இதுபோன்ற விசாரணைகளை சந்திக்க வேண்டி உள்ளது என உணருகிறேன். இதனால் மிகவும் வேதனை அடைந்து உள்ளேன். இதனால் தான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

Next Story