சாலை தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி - 5 பேர் படுகாயம்


சாலை தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி - 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Sept 2019 4:15 AM IST (Updated: 29 Sept 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

ஈஞ்சம்பாக்கத்தில் சாலை தடுப்பு சுவரில் கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டு திரும்பியபோது இந்த சோகம் நேர்ந்துவிட்டது.

தாம்பரம்,

சென்னை மண்ணடியை சேர்ந்தவர்கள் அகமது பாகீம் (வயது 19) மற்றும் முகமது சபீன்(19). இவர்கள் இருவரும் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

அகமது பாகீமுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதையொட்டி அகமது பாகீம், முகமது சபீன் மற்றும் அதே கல்லூரியில் அவர்களுடன் படிக்கும் சபிபுல்லா, முகமது முஷரப், யாஷர், சாகிருதீன் உள்பட 5 பேர் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நேற்று முன்தினம் இரவு உத்தண்டியில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றனர்.

அங்கு மாணவர்கள் அனைவரும் அகமது பாகீமின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு நேற்று அதிகாலை காரில் சென்னைக்கு திரும்பி வந்தனர். காரை மாணவர் முகமது முஷரப் ஓட்டினார். அவர், காரை அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. கார், மோதிய வேகத்தில் ‘பல்டி’ அடித்து, சாலையில் 3 முறை உருண்டு நின்றது.

இந்த விபத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடிய மாணவர் அகமது பாகீம், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற அனைவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகமது சபீனும் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த சபிபுல்லா, முகமது முஷரப், யாஷர், சாகிருதீன் உள்பட 5 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அடையாறு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அகமது பாகீம், முகமது சபீன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story