சிவந்தி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி: திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடம்
சிவந்தி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.
திருச்செந்தூர்,
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, பூர்விகா மொபைல்ஸ் இணைந்து 16-வது சிவந்தி கோப்பை கிரிக்கெட் போட்டி, மினி மாரத்தான், வினாடி-வினா போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கிரிக்கெட் போட்டிகள் கடந்த 24-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றன. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் இடத்தையும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி 2-ம் இடத்தையும் பிடித்தது.
தொடர்ந்து நடந்த வினாடி-வினா போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி முதலிடத்தையும், சாயர்புரம் போப் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன அணி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் 174 வீரர்களும், பெண்கள் பிரிவில் 88 வீராங்கனைகள் பங்கு பெற்றனர். ஆண்கள் பிரிவில் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர் பசுபதி முதல் இடத்தையும், பெண்கள் பிரிவில் நெல்லை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி மாணவி பிரியங்கா முதல் இடத்தையும் பிடித்தனர்.
சிவந்தி கோப்பை
பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
கிரிக்கெட் போட்டியில் முதல் இடம் பிடித்த ஆதித்தனார் கல்லூரி அணிக்கு ரூ.10 ஆயிரமும், சிவந்தி கோப்பையும், 2-ம் இடம் பிடித்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணிக்கு ரூ.6 ஆயிரமும், சிவந்தி கோப்பையையும் வழங்கினார்.
வினாடி-வினா போட்டியில் முதல் இடம் பிடித்த அணிக்கு ரூ.3 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.2 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
மினி மராத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்தவருக்கு ரூ.5 ஆயிரம், 2-வது இடம் பிடித்தவருக்கு ரூ.3 ஆயிரம், 3-வது இடம் பிடித்தவருக்கு ரூ.1,500-ம், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.300 பரிசாக வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் முதல் இடம் பெற்றவருக்கு ரூ.3 ஆயிரம், 2-வது இடம் பெற்றவருக்கு ரூ.2 ஆயிரம், 3-வது இடம் பெற்றவருக்கு ஆயிரம் ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.200-ம் பரிசாக வழங்கப்பட்டது. முடிவில், கல்லூரி உதவி பேராசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story