இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
திரைப்படத்துறையில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக 2 கட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளோம். அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிப்பதற்காக ஆலோசனை நடத்தினோம். இதை அவசர கோலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. ஆனாலும், விரைவில் அமல்படுத்த வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
அரசு மட்டுமல்ல, திரைத்துறையில் உள்ள பல்வேறு நபர்களும் இணைந்து இதற்கு ஆதரவளித்து ஒருமித்த கருத்தோடு வரும்போது, விரைவில் இது சாத்தியப்படும். இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அரசு திரைத்துறையை காப்பாற்ற நல்ல முயற்சி எடுத்து வருவதாக கூறி இருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.
புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுப்பது தொடர்பாகவும் அரசு உள்துறை மூலமாக கண்காணிக்க கூட்டத்தில் ஆலோசித்தோம். தமிழ் படங்கள் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வருவதால், அங்கே இருந்து கூட உடனடியாக பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அதை எந்த வழியில் கட்டுப்படுத்தலாம் என ஆலோசித்துள்ளோம். இதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியப்படும் என்ற கருத்தை நாங்கள் கூறியுள்ளோம். இதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story