லால்குடி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு மற்றொரு வீட்டில் உணவை ‘ருசி’ பார்த்த மர்ம நபர்கள்


லால்குடி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு மற்றொரு வீட்டில் உணவை ‘ருசி’ பார்த்த மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 30 Sept 2019 3:45 AM IST (Updated: 30 Sept 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய மர்ம நபர்கள் மற்றொரு வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை ‘ருசி’ பார்த்தனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மாந்துறை மெயின்ரோடு நகர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் தனி வீடுகள் கட்டி விற்பனை செய்து வருகிறார். இந்த குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் புகுந்த மர்ம நபர்கள் ராஜா என்பவர் வீட்டின் ஜன்னல் வழியாக ஒட்டடை அடிக்க பயன்படுத்தும் குச்சியை விட்டு, டேபிளை நகர்த்தி அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2,500-ஐ திருடினர்.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து இருந்த சீனிவாசன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து லேப்-டாப் மற்றும் ரூ.1,500-ஐயும், வரதராஜன் வீட்டில் இருந்த செல்போனை ஜன்னல் வழியாக எடுத்தனர். மேலும் நகர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் யோகமலர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவையும் ‘ருசி’ பார்த்தனர்.

வலைவீச்சு

வழக்கம்போல நேற்று காலை எழுந்த 3 வீடுகளின் உரிமையாளர்களும் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் பணம் திருட்டு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து 3 பேரும் கொடுத்த புகாரின் பேரில், லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story