புரட்டாசி மாதம் எதிரொலி கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை குறைவு


புரட்டாசி மாதம் எதிரொலி கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை குறைவு
x
தினத்தந்தி 30 Sept 2019 4:15 AM IST (Updated: 30 Sept 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாதம் எதிரொலியாக கட்டுமாவடி மீன்மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டும் அல்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது.

மீன்கள் வரத்து குறைவு

இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகள் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் அதிகமான பொதுமக்கள் விரதம் இருக்கின்றனர். புரட்டாசி மாதம் 30 நாட்களும் விரதம் இருப்பார்கள். இதனால் இம்மாதம் முழுவதும் சைவ உணவு கடைபிடிப்பார்கள்.

இம்மாதம் தொடங்கிய நாள்முதல் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை வெகுவாக குறைந்தது. வெளியூர்களிலிருந்து வரக்கூடிய வியாபாரிகளும் மீன்களை ஏலம் எடுக்க வரவில்லை.

இதனால் கட்டுமாவடி, மணமேல்குடி மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. மீன்களின் வரத்து குறைந்து இருந்ததால் மீன்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. போதிய மழை இல்லாததாலும், சீதோ‌‌ஷ்ண மாற்றத்தாலும் மீன்களின் வரத்து குறைந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீன்களின் வரத்து அதிகரித்தால் மட்டுமே இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். இம்மாதம் முழுவதும் மீன் விற்பனை மந்தமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

Next Story