மேட்டூர்-கொள்ளிடம் வரை தடுப்பணைகள்: காவிரி உபரிநீர் ஒரு சொட்டு கூட இனிமேல் வீணாகாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மேட்டூர்-கொள்ளிடம் வரை சில இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதால் இனிமேல் காவிரி உபரிநீர் ஒரு சொட்டு கூட வீணாகாது என்று மேட்டூரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேட்டூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வாங்கினார். பின்னர் அவர், 535 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
அரசு அதிகாரிகளை பொதுமக்கள் தேடி சென்று குறைகளை தெரிவிப்பதற்கு பதிலாக ஒரே இடத்தில் மக்களை தேடி அதிகாரிகள் சென்று அவர்களது பல்வேறு குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உழைக்கும் திறனற்ற, வயது முதிர்ந்த முதியோர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் சுமார் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, நீண்டகாலமாக மக்கள் வசித்து வருகின்ற வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென்று விண்ணப்பித்திருக்கின்றார்கள். அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், நிலம், வீடு வாங்கி உள்ளவர்கள் பட்டா மாறுதல் செய்வதற்கு மனு கொடுத்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்விற்கு பிறகு பட்டா மாறுதல் செய்து கொடுக்கப்படும். தனிப்பட்டா இருந்தால்தான் வங்கிகளில் கடனுதவி பெறமுடியும். எனவே, தனிப்பட்டா பெறுவதற்கு விண்ணப்பித்தால் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஒரு தவறான குற்றச்சாட்டை அவர் செல்கின்ற இடங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார். 2011 முதல் 2019-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளில் மேட்டூர் தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல், 83 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணையை தூர்வாரி சரித்திரம் படைத்த அரசு எங்களுடைய அரசு. முதல்-அமைச்சர் என்ற முறையில் நானே நேரில் வந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தேன். இதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து தங்கள் விளைநிலங்களுக்கு பயன்படுத்தி கொண்டார்கள்.
பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீரை சேமிக்கும் வகையில், தொலைநோக்கு சிந்தனையோடு, ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது முழுக்க, முழுக்க விவசாயிகளை கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை குறைகூறும் எதிர்க்கட்சியினர், அவர்கள் ஆட்சி காலத்தில் ஒரு ஏரியைக்கூட தூர்வாரவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் தொகையை ஒதுக்கி, குறிப்பிட்ட ஏரிகளை எடுத்து கொண்டு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ரூ.100 கோடியும், 2-ம் கட்டமாக ரூ.328 கோடியும் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு, 1,829 பொதுப்பணித் துறை ஏரிகளை தூர்வாருவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாருவதற்கு ரூ.1,250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சிறப்பான இந்த திட்டத்தை எதிர்க்கட்சியினர் குறைகளை கூறி கொண்டிருக்கின்றார்கள்.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணைகள் கட்டினார்கள்? தமிழகத்திலே அதிக ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் துரைமுருகன் தான். ஆனால், ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. எதுவுமே செய்யாத மு.க.ஸ்டாலின் எங்களை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. உபரி நீர் வீணாகுவதை தடுக்க ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் குமாரமங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர்-கொள்ளிடம் வரை தேவைப்படும் இடங்களில் புதிதாக தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதால் காவிரி உபரிநீர் ஒரு சொட்டு கூட இனிமேல் வீணாகாது.
தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க வேண்டும். அதற்காக தான் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளுக்கு போதிய நீர் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வேளாண்மை துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், 2011 முதல் 2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களையும் மக்கள் ஒப்பிட்டு பார்த்து, எந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்பதை முடிவு செய்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னதாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திர வாகனத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனிடையே, முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க வந்த ஒரு மூதாட்டி கூட்ட நெரிசலில் சிக்கியதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஓமலூர் நடராஜன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர், 424 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 92 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளி பெண் உள்பட 5 பேர் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கருப்பூர், ஓமலூர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.61½ கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 8 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், 4 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஓமலூர்-மேச்சேரி இடையே புதிதாக உயர்மட்ட ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும். திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை 4 வழிச்சாலையாக அமைக்கப்படும், என்றார்.
விழாவில், சந்திரசேகரன் எம்.பி., கலெக்டர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், வெற்றிவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து, அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி, அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு மாநில தலைவர் சம்பத்குமார், மேட்டூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் லலிதாசரவணன், முன்னாள் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், பி.என்.பட்டி-வீரக்கல்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் விஜயராகவன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான், ஒன்றிய செயலாளர்கள் சித்தேஷ்வரன், பச்சியப்பன், அசோகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்லதுரை, மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சுந்தரராஜன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், ஓமலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முருகன், ஒன்றிய துணை செயலாளர் சின்னதுரை, ஒன்றிய மீனவர் அணி செயலாளர் சதாசிவம், மீனவர் அணி துணை செயலாளர் தருமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story