நடத்தை விதி அமலுக்கு வந்தது முதல் மாநிலம் முழுவதும் ரூ.11 கோடி பறிமுதல் - தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வந்தது முதல் மாநிலம் முழுவதும் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறம் என கடந்த 21-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அன்றைய தினமே மாநிலத்தில் தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வந்தது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் காந்திவிலி கிழக்கு பகுதியில் காரில் சென்ற குஜராத் தொழில் அதிபர் ஒருவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுவரை மராட்டியத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புனேயில் 11 இடங்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல நாக்பூரில் 8, மும்பையில் 7, தானேயில் 7 என வெவ்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வந்த நாள் முதல் அரசு அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் தொடர்பான 75 ஆயிரத்து 981 பேனர்கள், கட்-அவுட்கள் மற்றும் கொடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதேபோல பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 73 ஆயிரத்து 445 பேனர்களும், தனியார் இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 16 ஆயிரத்து 428 பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story