குடிபோதையில் வண்டி மாறி ஏறியதால் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்


குடிபோதையில் வண்டி மாறி ஏறியதால் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 29 Sep 2019 10:15 PM GMT (Updated: 29 Sep 2019 8:42 PM GMT)

குடிபோதையில் வண்டி மாறி ஏறிய வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்தார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 6 மணி அளவில் திண்டுக்கல்லுக்கும், மாலை 6.10 மணிக்கு மயிலாடுதுறைக்குக்கும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சமுத்திரம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குடிபோதையில் மயிலாடுதுறைக்கு செல்லும் ரெயிலில் ஏறி படிக்கட்டின் அருகே உட்கார்த்திருந்தார்.

ரெயில் பொன்மலையை தாண்டி மஞ்சதிடல் ரெயில் நிலையம் சென்றது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட தொடங்கியது. அந்த நேரத்தில் அவரது அருகில் இருந்த பயணிகள் ரெயில் மயிலாடுதுறை செல்வது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தான் அவருக்கு திண்டுக்கல் ரெயிலுக்கு பதிலாக மயிலாடுதுறை ரெயிலில் மாறி ஏறியது தெரிந்தது.

ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பயணி

இதனால் அவர் உடனே ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார். இதில் தண்டவாளம் அருகே விழுந்ததில் அவருக்கு முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. ஓடும் ரெயிலில் இருந்து அவர் குதித்ததை கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ரெயில் திருவெறும்பூர் சென்றதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் அவர் வண்டியில் மறந்து விட்ட உடைமையை ரெயில்வே போலீசாரிடம் ஒப் படைத்தனர்.

முதலுதவி

உடைமையில் இருந்த ஒரு அடையாள அட்டையில் இருந்த செல்போன் எண்ணை ரெயில்வே போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். மறுமுனையில் அந்த நபர் பேசினார். அப்போது அவர் காயத்துடன் உயிர் தப்பியது தெரியவந்தது. மேலும் அவர் மஞ்சதிடலில் இருந்து பஸ் மூலம் டவுன் ரெயில் நிலையம் வந்தார்.

அவருக்கு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குடிபோதையில் இருந்ததால் ரெயில் மாறி ஏறியதில் அவருக்கு இந்த விபரீதம் நடந்தது. மேலும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

Next Story