பிளாஸ்டிக் தடுப்பு என்ற பெயரில் அதிகாரிகள் நடத்தும் சோதனையால் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்


பிளாஸ்டிக் தடுப்பு என்ற பெயரில் அதிகாரிகள் நடத்தும் சோதனையால் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 29 Sep 2019 9:01 PM GMT)

பிளாஸ்டிக் தடுப்பு என்ற பெயரில் அதிகாரிகள் அடிக்கடி நடத்தும் சோதனையால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

கருங்கல்,

குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேரூராட்சி கடைகள் காலி செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடைகளை காலி செய்யும் போது, ஏற்கனவே இருந்தவர்களுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்றுதான் காலி செய்கிறார்கள். ஆனால், புதிய கடைகள் கட்டிய பின்பு அவை ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கடை அடைப்பு

இந்த பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், முதற்கட்டமாக திங்கள்நகரில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

வங்கிகளில் பணம் போடும் போது, ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாகவும், ஜி.எஸ்.டி.யாகவும் செலுத்த வேண்டியது உள்ளது. ஏற்கனவே, வியாபாரத்துக்காக அதிக வட்டிக்கு பணம் கடன் வாங்கும் வியாபாரிகள், வங்கிகளின் இந்த நடவடிக்கையால் மேலும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஜி.எஸ்.டி.

உலக அளவில் அதிக ஜி.எஸ்.டி. வசூலிக்கும் நாடு இந்தியாதான். 28 சதவீதம் வரி, 18 சதவீதம் வரி இந்தியாவில் மட்டும்தான் நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே வாங்கும் சக்தி குறைந்துள்ள மக்கள் இந்த வரிவிதிப்பால் மேலும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஜி.எஸ்.டி. 5 சதவீதம் முதல் 12 சதவீதத்துக்குள் இருக்க வலியுறுத்தி வருகிறோம்.

வெளிநாட்டு முதலீடுகளை உள்ளே இழுக்க ஆர்வம் காட்டும் மத்திய-மாநில அரசுகள் அதில் 50 சதவீத ஆர்வத்தை உள்நாட்டு வணிகர்கள் மீது காட்டினால் உள்நாட்டு வணிகம் செழித்து ஓங்கும்.

பிளாஸ்டிக் தடுப்பு என்ற பெயரில் அதிகாரிகள் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்துகிறார்கள். இதனால், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சோதனைகளால் 37 சதவீதம் வியாபாரம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story