பெண்ணாடத்தில், வேலை வாங்கி தருவதாக கூறி 3 மாணவிகளிடம் ரூ.5 லட்சம் மோசடி
பெண்ணாடத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 மாணவிகளிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தனியார் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் செம்பேரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 40). இவர் பெண்ணாடம் இந்திராநகர் வடக்கு தெருவில் தொழிற்பயிற்சி நிலையம் நடத்தி அதன் முதல்வராக இருந்து வந்தார்.
தனது தொழிற்பயிற்சி நிலையத்துக்கு மாணவ-மாணவிகளின் வருகை அதிகரிக்கும் நோக்கத்தில் கிராமங்கள் தோறும் நேரில் சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து தனது தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு விமான பணிப்பெண்ணுக்கான படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும், மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்.
இதைநம்பி கள்ளக்குறிச்சி வடதொரசலூரை சேர்ந்த அலமேலு(21), அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சன்னியாசிநல்லூர் சிவபுரத்தை சேர்ந்த சரண்யா(21) மற்றும் திட்டக்குடி பெருந்துறை கிராமத்தை சேர்ந்த சத்யா(21) ஆகிய 3 பெண்களும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படித்து வந்தனர்.
மாணவிகள் படித்துக்கொண்டிருக்கும் போதே சக்திவேல் வேலைவாய்ப்பு பற்றி ஆசைவார்த்தைகளை கூறி அவர்களிடம் மாதம் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என பணத்தை சிறுக சிறுக கறந்தார். இப்படி ஒவ்வொரு மாணவியிடமும் தலா ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் வீதம் 3 மாணவிகளிடமும் மொத்தம் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் வாங்கினார்.
சில மாதங்களுக்கு பின்னர் வேலைக்கான ஆவணங்களை சக்திவேல் மாணவிகளிடம் கொடுத்தார். இதையடுத்து மாணவிகள் வேலைக்காக சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்களின் ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் அவை போலியானது என தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களிடம் பணம்பறிக்கும் நோக்கத்தில் சக்திவேல் வேலைக்கான உத்தரவு ஆவணத்தை போலியாக தயாரித்து கொடுத்து ஏமாற்றி இருப்பதை உணர்ந்தனர்.
பின்னர் 3 மாணவிகளும் சக்திவேலுவை சந்தித்து தங்களிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி கேட்டனர். ஆனால் அவரோ பணத்தை திருப்பி தர மறுத்ததோடு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து 3 மாணவிகளும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்து, அது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் 3 மாணவிகளிடமும் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சக்திவேல் பணம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த பண மோசடி சம்பவத்தில் நாமக்கல்லை சேர்ந்த நபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. போலீசாரிடம் சக்திவேல் சிக்கிக்கொண்டதை அறிந்த அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் வேறு மாணவிகள் யாரேனும் பண மோசடியில் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story