மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு - 1,624 பேர் எழுதினர்

மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் வகையில் திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 1624 பேர் எழுதினர்.
கடலூர்,
தமிழகத்தில் ஊரகப் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு இறுதி தேர்வில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் குடும்பத்தின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இத்தேர்வை எழுத அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி இந்த கல்வி ஆண்டுக்கான திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில்(2018-19) 8-ம் வகுப்பு படித்து முடித்து, தற்போது 9-ம் வகுப்பு படித்து வருபவர்களில் 2,016 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்காக கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக காலையில் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். பின்னர் தகவல் பலகையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையை பார்த்து தெரிந்துகொண்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்வை மாவட்டம் முழுவதிலும் 1,624 மாணவ-மாணவிகள் எழுதினர். 392 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் பிளஸ்-2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் அரசு உதவித்தொகை வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story