நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு


நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Sept 2019 8:09 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகரில் குண்டும், குழியுமாக கிடக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும், நில ஆக்கிரமிப்பு மற்றும் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும்போது கட்சி பாகுபாடு பார்க்கும் அதிகாரிகளை கண்டித்தும் நாகர்கோவில் மாநகர தி.மு.க. சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் சாகுல் அமீது, ஆனந்த், சுரேஷ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நடவடிக்கை

நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளிலும் இருக்கக்கூடிய சாலைகள் நடக்கக்கூட முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது. இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கலெக்டர் அலுவலகம் முன்புறமுள்ள சாலைகளும்கூட நடக்க முடியாத நிலையில் இருக்கிறது.

மாநகராட்சியில் பகுதியில் கலெக்டர் விரும்பும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஆய்வு மேற்கொள்ளலாம். அப்போதுதான் சாலைகள் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பது தெரியும். எனவே கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளை உடனடியாக செப்பனிட்டு மக்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும்.

ஒடுக்க முடியாது

மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் தி.மு.க.வின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் முயற்சிக்கிறார்கள். இந்த இடத்தில் இனிமேல் போராட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். போலீசாரின் அடக்குமுறையால் தி.மு.க.வின் போராட்டங்களை ஒடுக்க முடியாது.

இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.

முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர், “புத்தன் அணை குடிநீர் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும், விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும்“ என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும், கொடிகளையும் கையில் பிடித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டன.


Next Story