கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு


கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Sept 2019 8:50 PM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திரளானவர்கள் மனுகொடுக்க வந்தனர். அப்போது கோவை அன்னூர் அருகே உள்ள குப்பனூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி வசந்தா (வயது 35) என்ற பெண்ணும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனுகொடுக்க வந்தார். அவர் தனது கையில் மண்எண்ணெய் கேன் கொண்டு வந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வசந்தாவிடம் விசாரணை நடத்தியபோது, குப்பனூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் தன்னுடைய நகைகளை அடகுவைத்து ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் பணம் வாங்கியதாகவும், பணத்தை செலுத்திவிட்டு நகையை திரும்ப கேட்டபோது அந்த நகையை கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததால் அச்சத்துடன் வாழ்வதாக கூறினார்.

இதுகுறித்து ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியின்றி மண்எண்ணெய் கேனுடன் வந்து மனுகொடுக்க வந்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து, கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்துச்சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தைபெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தினால் நடத்தப்படும் தேர்வுகளில் இருந்து மொழிப்பாட பிரிவில் தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது. எனவே நீக்கப்பட்ட தமிழ்மொழி பாடப்பிரிவு கேள்வித்தாளை சேர்க்க வேண்டும். கீழ்கோர்ட்டு நீதிபதிகளுக்கான தேர்வை பிறமாநிலத்தவர்கள் எழுதி தேர்வானால் ஏழைமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வை பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் எழுதலாம் என்ற உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நஞ்சுண்டாபுரம் இட்டேரி, நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் 30-க்கும் மேலான குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து குடிசை மாற்றுவாரிய அதிகாரிகளிடம் கேட்டும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் நாங்கள் குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்யுமாறு குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். எங்களுக்கு மாற்று வீடுகளும் வழங்கப்படவில்லை. நாங்கள் எங்கே செல்வது என்றே தெரியவில்லை. எனவே எங்களுக்கு வீடு கிடைக்கவும், அதுவரை குடியிருக்கும் வீட்டிலேயே வசிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போயர் இன ஒற்றுமை சங்க தலைவர் பூபதி, அவைத்தலைவர் எம்.பி.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மனுகொடுக்க வந்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி ரோடு பாப்பம்பட்டி பிரிவில் உள்ள அழகு நிலையத்தில் சோபனா (25) என்ற பெண் வேலை செய்து வந்தார். கடந்த 16.7.2019 அன்று மர்மமான முறையில் சோபனா தூக்கில் பிணமாக தொங்கினர். அவரது சாவில் சந்தேகம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று எண்ணுகிறோம். எனவே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவர், முட்டி போட்டபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் தேவேந்திர வீதியில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் அரசின் ஆணையை மீறி கேபிள் டி.வி.க்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இருந்தாலும் அதற்கும், கேபிள் டி.வி.க்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story