செங்குன்றம் அருகே போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கைது


செங்குன்றம் அருகே போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2019 4:00 AM IST (Updated: 30 Sept 2019 9:54 PM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றம்,

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் மொண்டிஅம்மன் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 55). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு அப்பகுதியில் உள்ள மார்க்கெட் அருகே காலி இடம் உள்ளது. அங்கு கட்டுமான பணி நடந்துவருகிறது.

நேற்றுமுன்தினம் இரவு ராமநாதன், கட்டுமான பணியை பார்க்க சென்றார். அப்போது சோலையம்மன் நகரைச் சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரரான வெற்றிவேல் என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அவர்களை பார்த்த ராமநாதன், இந்த நேரத்தில் ஏன் இங்கு நிற்கிறீர்கள்? என கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு உருவானது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமநாதன், தனது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீஸ்காரர் வெற்றிவேலை மிரட்டியதோடு, அவரை துப்பாக்கியால் சுட்டார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டு அவர் மீது படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து வெற்றிவேல் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர்பீட்டர் விசாரணை நடத்தி, ரியல் எஸ்டேட் அதிபர் ராமநாதனை கைது செய்தார்.

அவர் லைசென்சு வாங்கி துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளார். போலீஸ்காரருடன் தகராறு ஏற்பட்டதும், அவரை மிரட்டுவதற்காக துப்பாக்கியை எடுத்ததாகவும், எதிர்பாராதவிதமாக சுட்டுவிட்டதாகவும் கூறினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான ராமநாதன், அகில இந்திய இந்து சேனா என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் மீது ஏற்கனவே செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரும், இவரது தம்பி பாலாவும் மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story