விசுவக்குடியில் நீர் ஆதாரம் உள்ள இடத்தில் கிணறு அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


விசுவக்குடியில் நீர் ஆதாரம் உள்ள இடத்தில் கிணறு அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 30 Sep 2019 11:00 PM GMT (Updated: 30 Sep 2019 7:11 PM GMT)

நீர் ஆதாரம் உள்ள இடத்தில் கிணறு அமைக்க வலியுறுத்தி, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் விசுவக்குடி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்து கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பதக்கங்கள், பரிசுகள் பெற்று வருகின்றனர். ஆனால் அவர்கள் பயிற்சி பெற கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஏதும் இல்லை. இதனால் வீரர்கள் வெளியூர்களுக்கு சென்று அங்குள்ள மைதானங்களில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த வீரர்களால் வெளியூர் சென்று பயிற்சி பெற முடியாததால், அவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்தில் உள்ள ஏதேனும் புறம்போக்கு நிலத்தில் வீரர்- வீராங்கனைகள் பயிற்சி பெற விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கிணறு, சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது

வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் போதிய மழை இல்லாததால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே இங்கு குடிநீர் தட்டுபாட்டை போக்கும் விதமாக விசுவக்குடி தொடக்கப்பள்ளியின் அருகே உள்ள ஊரணி குளத்தில் புதிய கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஏற்கனவே ரூ.18 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் 2018-19 ஆண்டு குடிநீர் பணிகள் ஒன்றிய பொது நிதியில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் புதிய கிணறு அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், மின்மோட்டார் அமைத்தல், பம்ப் ரூம் கட்டுதல் மற்றும் பைப்லைன் ஆகியவை அமைக்கப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய கிணறும், சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை.

மீண்டும் டெண்டர்

மின்மோட்டார், பம்ப் ரூம், பைப் லைன் ஆகியவை இன்னும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் மின் மோட்டார் அமைத்தல், பம்ப் ரூம் அமைத்தல் மற்றும் பைப்லைன் அமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.27 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் மீண்டும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஒதுக்கப்படும் நிதியிலிருந்து தகுந்த நீர் ஆதாரம் உள்ள விசுவக்குடி நீர்தேக்கத்தில் மாவட்ட நிர்வாகம் புதிய கிணறு அமைத்து விசுவக்குடி கிராமத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.

கலெக்டருக்கு நன்றி

குன்னம் தாலுகா நல்லூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன், விநாயகர் கோவில்களின் சுவாமிகள் வீதிஉலா வழக்கத்தில் உள்ளபடியே நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு துறைமங்கலம் கே.கே.நகர் பொதுமக்கள் குடியிருப்பில் இருந்து அரசு நகர்புற மருத்துவமனை வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு சென்று வர இணைப்பு பாதை ஏற்படுத்தி கொடுத்த கலெக்டர் சாந்தாவை, துறைமங்கலம் குறிஞ்சி குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் சோலைமுத்து, செயலாளர் ஆசைதம்பி, பொருளாளர் வேலுசாமி, துணைத் தலைவர் பசுபதி, பெரியசாமி, நசீர்முகமது, முகமது கனி, மருதராஜ் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர். மேலும் அவர்கள் சட்டமன்ற குழுவிற்கும், நகராட்சி ஆணையர், தாசில்தார் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

302 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 302 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விஜயன், மாவட்ட வழங்கல் அதிகாரி கங்காதேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story