செஞ்சி அருகே கோர சம்பவம், பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்தது - 3 பேர் உடல் சிதறி பலி


செஞ்சி அருகே கோர சம்பவம், பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்தது - 3 பேர் உடல் சிதறி பலி
x
தினத்தந்தி 1 Oct 2019 4:15 AM IST (Updated: 1 Oct 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி பலியானார்கள். 16 பேர் படுகாயமடைந்தனர். சரக்கு வாகனம் வெடித்து சிதறி உருக்குலைந்து போனது.

செஞ்சி, 

புதுச்சேரி முருங்கம்பாக்கத்தில் உள்ள வீராசாமி(வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இருந்து திருவண்ணாமலையை சேர்ந்த பரசுராமன் என்பவரது பட்டாசு கடைக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை ஒரு சரக்கு வாகனத்தில் நேற்று ஏற்றிச்சென்றனர்.

அந்த சரக்கு வாகனத்தை கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன்(27) என்பவர் ஓட்டினார். அவருடன் பட்டாசு கடை ஊழியரான புதுச்சேரி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சாய்பாபா(49) என்பவர் சென்றார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள வடவானூரில் நேற்று காலை 7.30 மணி அளவில் வாகனம் சென்று கொண்டு இருந்த போது, திடீரென புகை வந்ததால் டிரைவர் இளவரசன் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி அங்கிருந்த டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷாவிடம் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார்.

அவரும் தண்ணீரை கொடுத்துள்ளார். அதனை டிரைவர் வாங்கிச்சென்று வாகனத்தில் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்த பார்சல்கள் மீது ஊற்றி உள்ளார். அங்கே ஏன் தண்ணீர் ஊற்றுகிறீர்கள் என்று டிரைவரிடம் தையல்கடைக்காரர் ராஜாராம் கேட்டதற்கு, தார்ப்பாய்க்குள் பட்டாசு பார்சல்கள் உள்ளது என்று இளவரசன் கூறி உள்ளார்.

அந்த பார்சல்களில் இருந்து புகைவந்ததால் தண்ணீர் ஊற்றி அணைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் டிரைவரும், பட்டாசு ஆலை ஊழியரும் தண்ணீரை வாங்கி ஊற்றி உள்ளனர். அவர்களுக்கு டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷாவும் உதவியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன. அதனால் அருகில் இருந்த கடைக்காரர்களும், பொதுமக்களும் சிதறி ஓடியிருக்கின்றனர். கணநேரத்தில் வாகனத்தில் இருந்த 6 மூட்டை பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் சரக்கு வாகனமும் வெடித்து சிதறி அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது.

இந்த கோர சம்பவத்தில் சரக்கு வாகனத்தின் டிரைவர் இளவரசன், சாய்பாபா, டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷா ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள். அவர்களின் தலையும், உடல்பாகங்களும் தனித்தனியாக சிதறி கிடந்தன. டீக்கடைக்காரர் சாதிக்பாட்சா சம்பவ இடத்தில் இருந்து 200 அடி தொலைவில் உள்ள புதருக்குள் பிணமாக கிடந்தார். அவரது தலையும் துண்டாகி கருகி கிடந்ததால், அவரை முதலில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பிறகு மாலையில் தான் அவரை அடையாளம் கண்டனர். மேலும் இந்த கோர விபத்தில் பட்டாசுகள் சிதறி ஆங்காங்கே விழுந்து வெடித்ததில் 16 பேர் காயம் அடைந்தனர்.

அதோடு சாதிக்பாட்சாவின் டீக்கடை முழுமையாக சேதம் அடைந்தது. அதன் அருகில் உள்ள தையல் கடை, சலூன் கடை உள்பட 4 கடைகளின் இரும்பு ஷட்டர்களும் சேதம் அடைந்தன. இதுதவிர சுமார் 200 அடி தொலைவுக்குள் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளும், மின்கம்பங்களும், 2 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த சம்பவத்தின் போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது.

இந்த கோர சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர். போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் இருந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 16 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி மற்றும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

Next Story