திருத்துறைப்பூண்டியில் நகராட்சியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டியில் நகராட்சியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் நகராட்சியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சியில் 94 குக்கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருத்துறைப்பூண்டிக்கு தான் வருகிறார்கள். இங்கு அரசு மருத்துவமனை, கல்லூரி, பள்ளிக்கூடம், ஜவுளிகடைகள், மளிகை கடைகள், தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பணிகளுக்கு திருத்துறைப்பூண்டிக்கு தான் வர வேண்டும்.

ஆனால் இந்த நகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர கடந்த 3 மாதங்களாக ஆணையர் இல்லை. மேலும் பொறியாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர், வருவாய் ஆய்வாளர், மேலாளர், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இல்லாததால் பணிகள் ஏதும் நடைபெறாமல் திருத்துறைப்பூண்டி நகராட்சி உள்ளது.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உடனடியாக அதிகாரிகளை நியமிக்கக்கோரியும், நகராட்சியை கண்டித்தும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நகராட்சி எதிர்புறம் உள்ள காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட 547 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் ஆடலரசன் எம்.எம்.ஏ., நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தி.மு.க.வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story