கரசானூர் கிராமத்தில் 2 கோவில்களில் திருட்டு - உண்டியல்களை பெயர்த்தெடுத்துச் சென்ற துணிகரம்


கரசானூர் கிராமத்தில் 2 கோவில்களில் திருட்டு - உண்டியல்களை பெயர்த்தெடுத்துச் சென்ற துணிகரம்
x
தினத்தந்தி 30 Sep 2019 10:15 PM GMT (Updated: 30 Sep 2019 8:13 PM GMT)

கரசானூர் கிராமத்தில் 2 கோவில்களில் புகுந்து மர்ம ஆசாமிகள் உண்டியல்களை பெயர்த்தெடுத்துச் சென்ற துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா மயிலம் மெயின்ரோட்டில் உள்ள கரசானூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெக்காளி அம்மன் கோவில் மற்றும் மதுரை வீரன் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இதில் வெக்காளி அம்மன் கோவிலில் பூசாரியாக திருமால் என்பவரும், மதுரை வீரன் கோவிலில் பூசாரியாக முருகன் என்பவரும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பூசாரிகள் திருமால் மற்றும் முருகன் ஆகியோர் தங்களின் கோவில்களில் பூஜையை முடித்துக்கொண்டு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

நேற்று காலை அவர்கள் கோவில்களை திறக்க வந்தபோது 2 கோவில்களின் கதவின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் அப்படியே பெயர்த்து எடுத்து திருடிச் செல்லப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்கு வெளியே 3 காலி மதுபாட்டில்கள் கிடந்தன.

இந்த துணிகர திருட்டு பற்றிய தகவல் சிறிது நேரத்திலேயே கிராமத்தில் பரவியது. உடனே கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கோவில்களின் உண்டியல்கள் திருடிச் செல்லப்பட்டது குறித்து வானூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் விழுப்புரத்தில் இருந்து போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் பிரிஸ்டி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

அது கோவிலில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்றது. அந்த கிராமத்தையொட்டியுள்ள கல்குவாரி பகுதியை நோக்கி சென்று சிறிது தூரத்தில் நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

அங்கு திறந்த வெளியில் வெக்காளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் வெள்ளியால் ஆன காணிக்கை பொருட்கள் திருடிச் செல்லப்பட்டு, உண்டியல் மட்டும் கிடந்தது. ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்த உண்டியலை போலீசார் கைப்பற்றினார்கள்.

அதே சமயம் மதுரை வீரன் கோவில் உண்டியல் அந்த பகுதியில் எங்கும் இல்லை. அதன் பூட்டை உடைக்க முடியாததால் திருடர்கள் உண்டியலை அப்படியே தூக்கிச்சென்றுவிட்டனர்.

நள்ளிரவில் 3 நபர்கள் கிராமத்துக்குள் புகுந்து கோவில்கள் அருகிலேயே அமர்ந்து மதுகுடித்துவிட்டு பின்னர் 2 கோவில் கதவுகளின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்து உண்டியல்களையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் புகுந்து உண்டியல்களை திருடிச் சென்ற சம்பவம் கரசானூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story