வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில், குறைவாக தண்ணீர் இருப்பதால் குடிக்க முடியாமல் வனவிலங்குகள் அவதி
வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் குறைவாக தண்ணீர் இருப்பதால் குடிக்க முடியாமல் வனவிலங்குகள் அவதி யடைந்து வருகின்றன. எனவே முறையாக தண்ணீர் நிரப்ப மலையோர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை,
கோவை வனக்கோட்டம் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை என 7 வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இங்கு புலி, சிறுத்தைப்புலி, கழுதைப்புலி, காட்டு யானை, உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இதில் காட்டு யானை, காட்டுப்பன்றி ஆகிய வனவிலங்குகள் மலையோர கிராமங்களில் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இதைத்தடுக்க மலையடிவார பகுதியில் அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைந்த பகுதி வழியாக வனவிலங்குகள் வெளியே வந்து விடுகின்றன. பெரும்பாலும் குடிதண்ணீருக்காகதான் வனவிலங்குகள் வெளியே வருவதால் அவற்றுக்கு தேவையான தண்ணீர் வனப்பகுதிக்குள்ளேயே கிடைக்கும் வகையில் வனப்பகுதிக்குள் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன.
இதில் வனப்பகுதியை ஒட்டி உள்ள இடத்தில் சாய்வுதள தொட்டிகளும், அடர்ந்த வனப்பகுதிக்குள் வட்ட வடிவிலான தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இந்த தொட்டிகளில் வாரத்துக்கு இருமுறை தண்ணீர் நிரப்ப வனத்துறை ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். ஆனால் அவற்றுக்கு முறையாக தண்ணீர் நிரப்பாததால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி மீண்டும் மலையோர கிராமங்களுக்குள் வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து மலையோர கிராம மக்கள் கூறியதாவது:-
பெரும்பாலும் காட்டு யானைகள் தண்ணீர்த்தேடிதான் வனப்பகுதியை விட்டு வெளியே வருகிறது. எனவே வனப்பகுதிக்குள்ளேயே தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் நிரப்பப்பட்டதால் ஓரளவுக்கு காட்டு யானைகளின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது வனப்பகுதியில் மழை பெய்து வந்தாலும், சில வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க, தொட்டியைதான் தேடி செல்கின்றன. இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. ஆனால் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுவது இல்லை.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் சில இடங்களில் மட்டுமே தண்ணீர் நன்றாக இருக்கிறது. ஆனால் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட இடங்களில் வறட்சியாகதான் இருக்கிறது. அங்குதான் தொட்டிகளில் முறையாக தண்ணீர் நிரப்ப வேண்டும். ஆனால் அதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. பெரும்பாலும் இந்த பகுதிகளில் வட்ட வடிவிலான தொட்டிகள்தான் அதிகளவில் உள்ளது. 5 அடி ஆழம் கொண்ட இந்த தொட்டிகளில் அதிகபட்சமாக 2 அடிக்கு மட்டுமே தண்ணீர் இ்ருக்கிறது. அந்த தண்ணீரை காட்டு யானைகள் எளிதாக குடித்து விடுகின்றன. ஆனால் மான்கள், காட்டு பன்றிகள் குடிக்க முடிவது இல்லை. இதனால் மான்கள், காட்டு பன்றிகள் அடிக்கடி வட்டவடிவிலான இந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. அத்துடன் தண்ணீர்த்தேடி கிராமங்களுக்குள்ளும் வனவிலங்குகள் வந்து விடுகின்றன.
எனவே எந்தப்பகுதியில் வறட்சியாக இருக்கிறதோ அந்தப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் முறையாக தண்ணீர் நிரப்ப உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story