சாலை-குடிநீர் வசதிகோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்


சாலை-குடிநீர் வசதிகோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலத்தில், சாலை-குடிநீர் வசதி செய்து தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,

குத்தாலம் மெயின்ரோட்டில் சேத்திரபாலபுரம், தொழுதாலங்குடி ஆகிய ஊராட்சிகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மா.ஈழவளவன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல்லிணக்க பேரவை செயலாளர் ராஜ்மோகன், நிர்வாகிகள் பாரதிவளவன், பொன்பாலு, சூரியமூர்த்தி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேத்திரபாலபுரம் ராமாமிர்தம் நகர் மற்றும் நாராயணசாமி நாயுடு தெருவுக்கு உடனடியாக சாலை அமைக்க வேண்டும். ராமாமிர்தம் நகரில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

குடிநீர் வசதி

தொழுதாலங்குடி ஊராட்சி கன்னியம்மன் கோவில் தெருவுக்கு புதிய தார்சாலை மற்றும் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, குத்தாலம் தாசில்தார் ஹரிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) தமிழ்கொடி ஆகியோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதிமொழி பத்திரம் தரும்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், 3 மாதத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்து மூலம் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story