கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை: அருவிகளில் வெள்ளப்பெருக்கு; அணைகளில் நீர்மட்டம் உயர்வு
கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை 6.30 மணி வரை கன மழை கொட்டி தீர்த்தது. இதில் அப்சர்வேட்டரியில் 96.8 மி.மீட்டர் மழையும், போட் கிளப்பில் 80 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளன.
இந்த மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் புதிய அணையின் நீர்மட்டம் சுமார் 2.5 அடி உயர்ந்து 16.5 அடியாக (மொத்த உயரம் 36 அடி) காணப்படுகிறது. பழைய அணையின் நீர்மட்டம் 10 அடியாக (மொத்த உயரம் 21 அடி) உயர்ந்தது. பலத்த மழை எதிரொலியாக நட்சத்திர ஏரி நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேறியதால் ஏரியை சுற்றிலும் உள்ள சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. சில இடங்களில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகள் கடுமையாக பாதிப்படைந்தனர்.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவின்பேரில் இளநிலை பொறியாளர் பட்டுராஜன் மற்றும் ஊழியர்கள் ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர். தண்ணீர் அதிகளவு சென்றதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் கொட்டியது. இதுமட்டுமின்றி பியர்சோழா, பாம்பார், தேவதை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த மழை காரணமாக அண்ணாநகர் பகுதியில் உள்ள வின்சென்ட் என்பவரின் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து சதீஷ் என்பவர் வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் சதீசின் குடும்பத்தினர் உயிர் தப்பினர். இதுதவிர பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
பலத்த மழையால் நகரின் பல்வேறு சாலைகள் சேதம் அடைந்தன. அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story