மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: கோவில்பட்டியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது - கடம்பூரில் வீடு இடிந்து சேதம்


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: கோவில்பட்டியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது - கடம்பூரில் வீடு இடிந்து சேதம்
x
தினத்தந்தி 1 Oct 2019 3:15 AM IST (Updated: 1 Oct 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் கோவில்பட்டியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கடம்பூரில் வீடு இடிந்து சேதம் அடைந்தது.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 72 மில்லி மீட்டர் மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. நேற்று தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் மருதூர் மேலக்காலில் 500 கனஅடியும், ஸ்ரீவைகுண்டம் வடகாலில் 98 கனஅடியும், தென்காலில் 904 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மழையும் பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். விவசாய பணிகளை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் மழை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் உப்பு தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டு இருந்த உப்பை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

சாத்தான்குளம், தட்டார்மடம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர், குலசேகரன்பட்டினம், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது. கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி, மெஞ்ஞானபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்று பகலிலும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

பலத்த மழையின் காரணமாக, கடம்பூர் ஓணமாக்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி காளிமுத்துவுக்கு (வயது 40) சொந்தமான வீட்டின் மேற்கூரை நேற்று காலையில் திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேதம் அடைந்த வீட்டை கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

கோவில்பட்டி திருமலை நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் வாறுகால் வசதி இல்லாததால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க வேண்டும். அங்கு வாறுகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கோவில்பட்டி பாரதி நகர், அம்பேத்கர் நகர் இணைப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க வலியுறுத்தி, அதில் மரக்கன்றுகளை நட்டு அப்பகுதி மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயபுரம் பகுதியில் பெய்த பலத்த மழையால், சிவசங்கரம்பிள்ளை ஓடையை மூழ்கடித்தவாறு தண்ணீர் சென்றது. இதனால் எட்டயபுரம் தெப்பக்குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் - 5

காயல்பட்டினம் - 2

விளாத்திகுளம் - 13

காடல்குடி - 17

வைப்பார் - 11

கோவில்பட்டி - 48

கயத்தாறு - 29

கடம்பூர் - 63

கழுகுமலை - 30

ஓட்டப்பிடாரம் - 15

மணியாச்சி - 56

வேடநத்தம் - 10

கீழஅரசடி - 3

எட்டயபுரம் - 72

சாத்தான்குளம் - 69

ஸ்ரீவைகுண்டம் - 23

தூத்துக்குடி - 1.5

Next Story