கடைவீதியில் கைக்குட்டை விற்கும் இளைஞர்களிடம் போலீசார் கெடுபிடி நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு


கடைவீதியில் கைக்குட்டை விற்கும் இளைஞர்களிடம் போலீசார் கெடுபிடி நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் கடைவீதியில் கைக்குட்டை விற்கக்கூடாது என்று இளைஞர்களிடம் போலீசார் கெடுபிடி செய்வதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை கோரியும் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி வர்த்தகப்பிரிவு பொதுச்செயலாளர் அஷ்ரப் அலி, பொருளாளர் அன்சாரி உள்ளிட்டோர் வீதிகளில் கைக்குட்டை விற்கும் பட்டதாரிகள், இளைஞர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கலெக்டர் சிவராசுவிடம், பட்டதாரி சதீஷ்மூர்த்தி உள்ளிட்ட இளைஞர்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பட்டதாரிகள் உள்பட 40 பேர், என்.எஸ்.பி. ரோடு, கடைவீதி பகுதிகளில் சாலையின் ஓரமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இன்றி கைக்குட்டைகளை கையில் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். விற்பனையாகும் கைக்குட்டைகளால் கிடைக்கும் வருவாயால்தான் எங்கள் குடும்பம் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் கைக்குட்டைகளை வீதியில் நின்று விற்பனை செய்யக்கூடாது என்று ஒரு நிறுவனம் தூண்டுதலின் பேரில் போலீசார் எங்களை வியாபாரம் செய்யவிடாமல் கெடுபிடி செய்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். எனவே, நாங்கள் தொடர்ச்சியாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

செல்போன் கோபுரம் அமைக்க தடை

திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதி மக்கள், ரஹ்மத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தரப்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘தென்னூர் அண்ணாநகர் அக்பர் தெருவில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறோம். மசூதி மற்றும் பள்ளி உள்ள பகுதி ஆகும். 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சித்து வருகிறது. செல்போன் கோபுரம் அமைத்தால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கதிர்வீச்சால் அச்சுறுத்தல் ஏற்படலாம். எனவே, செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

திருச்சி வயலூர் சாலையில் இரட்டைவாய்க்கால் பஸ் நிலையம் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, வாசன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், மக்கள் அதிகாரம் அமைப்பு ஆகியவை சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தி.க. கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும்

அகில இந்திய இந்து மகாசபா அமைப்பின் திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், திருவானைக்காவல் கோபுரங்கள் அருகில் தி.க. அமைப்பினர் தங்களது அமைப்பின் கொடிகளை இந்து மக்கள் மனது புண்படும் வகையில் கட்டி கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் மனு அளித்ததன் பேரில், இந்து அறநிலையத்துறை சார்பில் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் இணை ஆணையர் ஜெயராமன், திருச்சி மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினருக்கு தி.க. கொடிக்கம்பத்தை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளார். எனவே, திருச்சி மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இதேபோல் எடமலைப்பட்டி புதூரில் பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர், பெரிய அளவில் போராட்டம் நடக்கும் முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

கும்பக்குறிச்சி, எரங்குடியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சமூக நீதி பேரவை அமைப்பினர் கொடுத்த மனுவில், மணிகண்டம் ஒன்றியம் சேதுராப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எங்கள் ஊருக்கு திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை போடப்பட்டு, கடந்த 2 மாதத்திற்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. அந்த சாலை சேதம் அடைந்து ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண்சாலை போன்று தோற்றம் அளிக்கிறது. எனவே கும்பக்குறிச்சி முதல் எரங்குடி வரை மீண்டும் புதிதாக தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசமான சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும், என்று கூறப்பட்டிருந்தது.


Next Story