சாணார்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு
சாணார்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என விஷ்வஇந்து பரிஷத் அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட விஷ்வஇந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமாரபாளையம் தாலுகா சாணார்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மணல் அள்ளும்போது அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக போடும் வலைகளை அறுத்து மீனவர்களை அச்சுறுத்தி வருகிறார்கள்.
இங்கு மணல் அள்ளுவதால் மீன்வளமும், கனிமவளமும் மிகவும் பாதிப்படைந்து உள்ளது. எனவே தாங்கள் தலையிட்டு மணல் கொள்ளையை தடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
இதேபோல் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சபரிநாதன் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த மாதம் 31-ந் தேதி பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் அருகே சொந்த வேலையாக சென்று கொண்டு இருந்தேன். அப்போது சரக்கு வாகனம் ஒன்றில் சுமார் 30 கன்று குட்டிகளை அடைத்து ஏற்றி வந்தனர். அப்போது அவர்களிடம் கேட்டபோது கசாப்பு கடைக்கு கொண்டு செல்வதாக கூறினர். இதையடுத்து அந்த வாகனத்தை கன்றுகுட்டிகளுடன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, கோசாலைக்கு அனுப்புமாறு கூறினேன்.
ஆனால் போலீசார் 30 கன்றுகுட்டிகளையும் கசாப்பு கடைக்கு அனுப்பி விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
Related Tags :
Next Story