மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி உறுதியாகி விட்டது - மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிவிப்பு


மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி உறுதியாகி விட்டது - மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 5:00 AM IST (Updated: 1 Oct 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்தார்.

மும்பை, 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டு பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தன.

இந்த நிலையில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் மராட்டிய சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அந்த இரு கட்சிகளும் அறிவித்தன. ஆனால் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.

இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே அமித்ஷாவுடன் பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறுகிறது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றி மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவு ரத்து நடவடிக்கையால் தங்கள் கட்சிக்கு செல்வாக்கு உயர்ந்து இருப்பதாக பா.ஜனதா கருதுகிறது. இதனால் சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட பா.ஜனதா விரும்புகிறது.

இதன் காரணமாக இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நீடித்து வந்தது.


இந்த நிலையில் மாநில பா.ஜனதா தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பா.ஜனதா, சிவசேனா இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு விட்டது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும் கூட்டாக தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிப்பார்கள்” என்றார்.

இதேபோல் சிவசேனா மந்திரி சுபாஸ் தேசாய் கூறுகையில், “மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சி, ராஷ்டிரீய சமாஜ், சிவ் சங்ராம் சங்கதானா மற்றும் ரயத் கராந்தி சேனா உள்ளிட்ட பிற கட்சிகளும் எங்கள் மெகா கூட்டணியில் இடம்பிடித்துள்ளன” என்றார்.

வருகிற 4-ந் தேதி வேட்பு மனு தாக்கல் முடிய உள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளை (புதன்கிழமை) பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தங்கள் தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இரு கட்சிகளும் தங்களுக்கென முடிவாகி உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு ‘பி’ பாரங்களை வழங்கி வருகின்றன.

Next Story