கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்துவிடுங்கள் எடியூரப்பாவுக்கு சித்தராமையா வலியுறுத்தல்


கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்துவிடுங்கள் எடியூரப்பாவுக்கு சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:00 AM IST (Updated: 1 Oct 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்துவிடுங்கள் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ராய்ச்சூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் விஷயத்தில் தான் கம்பி மீது நடப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார். கம்பி மீது நடக்கும் நிலை ஏன்?. கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுங்கள். எடியூரப்பாவை கண்டால், எனக்கு அய்யோ பாவம் என்று நினைக்க தோன்றுகிறது.

கர்நாடக பா.ஜனதாவில் எடியூரப்பாவின் இறக்கைகள் நறுக்கப்பட்டுவிட்டன. மத்திய அரசிடம் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதியை கேட்டு பெறும் தைரியம் அவருக்கு இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல் மத்திய-மாநில அரசுக்கு கண், காது, மூக்கு இவை யாவும் இல்லை. கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை, இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். முன்பு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உடனே நிதியை அறிவித்தார்.


மத்தியில் பா.ஜனதா அரசு உள்ளது. மாநிலத்திலும் பா.ஜனதா அரசு அமைந்தால், அதிக நிதியை கேட்டு பெற முடியும் என்று எடியூரப்பா தேர்தலின்போது கூறினார். இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு தான் உள்ளது. ஏன் நிதியை பெற முடியவில்லை?. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மந்திரிகள் யாரும் சுற்றுப்பயணம் செய்யவில்லை. பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். அவர்களின் கஷ்டத்தை கேட்க யாரும் இல்லை.

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடத்த வேண்டும். இதுகுறித்து முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இந்த கூட்டத்தொடரை பெங்களூருவில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தகுதி நீக்க எம்.எல்.ஏ. ஆனந்த்சிங்கின் கோரிக்கையை உடனே ஏற்று பல்லாரி மாவட்டத்தை 2 ஆக உடைக்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆனந்த்சிங்குக்கு முதல்-மந்திரி உதவுகிறார். பல்லாரியை விட பெலகாவி மாவட்டம் பெரியது. அங்கு 18 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பா.ஜனதா அரசு கவிழ்ந்துவிடும். 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு எடியூரப்பா ஆட்சி அமைத்துள்ளார். பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இது சட்டவிரோதமான அரசு. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு பண ஆசை காட்டி கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு பா.ஜனதா அரசு அமைத்துள்ளது. எடியூரப்பா பலவீனமான முதல்-மந்திரி. கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும்.

மைசூரு தசரா விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் அந்த விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. நான் மந்திரியாகவும், முதல்-மந்திரியாகவும் இருந்தபோது பல முறை தசரா விழாக்களை நடத்தியுள்ளேன். இப்போது பா.ஜனதா அரசு உள்ளது. அவர்கள் அந்த விழாவை நடத்தட்டும்.

கர்நாடக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளேன். எனக்கும், கே.எச்.முனியப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவறானது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி எனக்கு தான் கிடைக்கும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story