புதுச்சேரியில் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி பிரசாரம் - நாராயணசாமி தகவல்


புதுச்சேரியில் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி பிரசாரம் - நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2019 5:15 AM IST (Updated: 1 Oct 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது வெற்றிக்காக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பாடுபடுவோம்.

எங்கள் அரசு புதுவை மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தற்போதைய எம்.பி.யான வைத்திலிங்கம் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற தொகுதி இதுவாகும். அவரும் தொகுதிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

எங்கள் ஆட்சியின் சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம். கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி பிரசாரம் மேற்கொள்வோம். இந்த தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வைத்திலிங்கம் 15 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்றுள்ளார். அந்த அளவுக்கு மக்கள் அமோக ஆதரவு தந்தனர்.

ஜான்குமார் ஏற்கனவே நெல்லித்தோப்பு தொகுதியில் மக்கள் பணி ஆற்றி உள்ளார். அவரது பணியினை இந்த தொகுதி மக்கள் நன்கு அறிவார்கள். எனவே அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வாக்காளர்கள் வெற்றிபெற செய்வார்கள்.

புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந்தேதி வர உள்ளார். ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி, துணை முதல் மந்திரியையும் பிரசாரத்துக்கு அழைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story