உளுந்தூர்பேட்டையில், சர்வேயர் வீட்டில் நகை கொள்ளை மின்சாதன பொருட்களுடன் காரையும் திருடிச் சென்ற மர்மநபர்கள்


உளுந்தூர்பேட்டையில், சர்வேயர் வீட்டில் நகை கொள்ளை மின்சாதன பொருட்களுடன் காரையும் திருடிச் சென்ற மர்மநபர்கள்
x
தினத்தந்தி 1 Oct 2019 10:15 PM GMT (Updated: 1 Oct 2019 2:29 PM GMT)

உளுந்தூர்பேட்டை சர்வேயர் வீட்டில் புகுந்து நகை, மின்சாதன பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் வீட்டில் இருந்த காரையும் திருடிச் சென்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலை அண்ணாமலை நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, குழந்தைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். அண்ணாதுரை மாதம் ஒரு முறை உளுந்தூர்பேட்டையில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அண்ணாதுரைக்கும், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அண்ணாதுரை குடும்பத்தினர் வெளியூரில் வசிப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் மின்சாதன பொருட்களை கொள்ளையடித்ததோடு, அண்ணாதுரைக்கு சொந்தமான காரையும் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் ரேகைகளை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story