கால்டாக்சி டிரைவரை கத்தியால் குத்தி கார் கடத்தல் மர்மநபருக்கு வலைவீச்சு


கால்டாக்சி டிரைவரை கத்தியால் குத்தி கார் கடத்தல் மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Oct 2019 3:45 AM IST (Updated: 2 Oct 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே கால் டாக்சி டிரைவரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்தி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்போரூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 31). இவர் கால்டாக்சி டிரைவராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு பெண் ஒருவரை சவாரி ஏற்றிச்சென்றார். பின்னர் புதுச்சேரியில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு சென்னை வருவதற்காக காத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவர் குடிபோதையில் ராமுவிடம் கேளம்பாக்கம் பகுதி வரை செல்லவேண்டும் என்றும், கட்டணமாக ரூ.1,800 தருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அதிக பணம் கிடைக்கும் ஆசையில் ராமு, அந்த நபரை காரில் ஏற்றிக்கொண்டார். பின்னர், காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே காலவாக்கம் அருகே வந்த போது, சற்று இருட்டான பகுதியில் சிறுநீர் கழிக்க வேண்டும் காரை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

காரை நிறுத்தியதும் கீழே இறங்கிய அந்த நபர், ராமுவை திடீரென்று கத்தியால் குத்தினார். உடனே வலிதாங்க முடியாமல் ராமு கீழே விழுந்ததும், அந்த நபர் காரை திருடி சென்றார்.

இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் திருப்போரூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற ராமு, தன்னை தாக்கிவிட்டு தனது காரை ஒருவர் கடத்தி சென்றதாக புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜா கடத்தப்பட்ட காரை தேடி வந்தார். இந்த நிலையில் அந்த நபர் கடத்தப்பட்ட காரை திருவான்மியூர் கடற்கரையில் விட்டுச்சென்றது தெரியவந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரை மீட்டனர். காயமடைந்த டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story