‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு: தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு: தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Oct 2019 3:45 AM IST (Updated: 2 Oct 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

தேனி,

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடாக மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்ந்தது தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி முதல்வர் சுந்தரம், சென்னை பாலாஜி மருத்துவ கல்லூரி முதல்வர் சாய்குமார், ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரி முதல்வர் பிரேம்நாத் பகிரய்யா ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் முகமது இர்பானும் ஆள்மாறாட்டத்தில் சிக்கியதால், அந்த கல்லூரி முதல்வருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, அந்த கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ், துணை முதல்வர் முருகன் ஆகியோர் நேற்று காலை 10.20 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள்.

அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின் போது கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ், மாணவர் முகமது இர்பான் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கல்லூரி முதல்வர், துணை முதல்வர் இருவரிடமும் பிற்பகல் 2.30 மணி வரை விசாரணை நடந்தது. அதன்பிறகு விசாரணை முடிந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணையின்போது, மாணவர் முகமது இர்பான் கடந்த 8-ந்தேதியில் இருந்து கல்லூரிக்கு வரவில்லை என்றும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் உத்தரவுப்படி சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடந்தபோது, அதிலும் அவர் பங்கேற்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தர்மபுரி கல்லூரி முதல்வர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, மாணவர் முகமது இர்பான் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் யாருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

Next Story